தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விசாரணைக்குச் செல்ல அதிபர் யூன் மீண்டும் மறுப்பு

2 mins read
2cdc7bff-87f4-41b6-880c-6ae89d288b19
திரு யூன், பதவியில் இருக்கும்போதே கைதுசெய்யப்பட்டுள்ள முதல் தென்கொரிய அதிபர் ஆவார். - படம்: இபிஏ

சோல்: தென்கொரியப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை (ஜனவரி 17) அதிபர் யூன் சுக் யோலிடம் மீண்டும் நடத்தவிருந்த விசாரணையை அவர் நிராகரித்துள்ளார்.

முன்னதாக, புலனாய்வுத் துறை அதிகாரிகள், கைது செய்யப்பட்டுள்ள அதிபர் யூனை மீண்டும் விசாரணைக்காக அழைத்ததாக யோன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்திருந்தது.

திரு யூன், பதவியில் இருக்கும்போதே கைது செய்யப்பட்டுள்ள முதல் தென்கொரிய அதிபர் ஆவார்.

அரசாங்கத்திற்கு எதிராகக் கிளர்ச்சியைத் தூண்டியதாக அவர்மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அவர் தற்போது சோல் தடுப்புக்காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளார். திரு யூனின் வழக்கறிஞர்கள் அவர் கைது செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்தபோதும், சோல் மத்திய மாவட்ட நீதிமன்றம் வியாழக்கிழமை (ஜனவரி 16) அந்த முறையீட்டை நிராகரித்து, திரு யூனின் கைது நடவடிக்கை சட்டபூர்வமானது எனத் தீர்ப்பளித்தது.

திரு யூன் வெள்ளிக்கிழமை (ஜனவரி 17) காலை பத்து மணிக்கு (சிங்கப்பூர் நேரப்படி காலை 9 மணி) விசாரணைக்காக அழைக்கப்பட்டதாக யோன்ஹாப் செய்தி நிறுவனம் கூறியது.

இதற்கு முன்தினம், விசாரணைக்காக அழைக்கப்பட்டபோது தமது உடல்நலத்தைக் காரணமாகச் சொல்லி அவர் விசாரணைக்குச் செல்ல மறுத்தார்.

பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ள அதிபரை விசாரிக்க, அதிகாரிகளுக்கு 48 மணி நேரம் உள்ளது. அதன் பிறகு, அவர்கள் அவரை விடுவிக்க வேண்டும் அல்லது இருபது நாள்கள் வரை அவரைத் தடுத்துவைப்பதற்கான கைதாணையைப் பெற வேண்டும்.

இந்நிலையில், திரு யூனின் தடுப்புக்காவலை இருபது நாள்களுக்கு நீட்டிக்கும் கைதாணை எந்நேரத்திலும் விதிக்கப்படலாம் என்று பல ஊடக அறிக்கைகள் கூறுகின்றன.

குறிப்புச் சொற்கள்