வடகொரியர் அறுவரைத் தாய்நாட்டிற்குத் திருப்பி அனுப்பிய தென்கொரியா

1 mins read
da26f613-2789-475e-a870-dafe555dddcb
வடகொரியர்கள் பலமுறை தற்செயலாகத் தென்கொரிய நீர்ப்பரப்பிற்குள் புகுந்துள்ளனர். - படம்: தென்கொரிய ஒருங்கிணைப்பு அமைச்சு

சோல்: இவ்வாண்டுத் தொடக்கத்தில் தற்செயலாக தென்கொரியக் கடற்பரப்பில் புகுந்த வடகொரியர் அறுவரை அவர்கள் நாட்டிற்கே தென்கொரியா திருப்பி அனுப்பியது.

அந்த அறுவரும் தாய்நாட்டிற்குத் திரும்ப விருப்பம் தெரிவித்ததாகத் தென்கொரிய ஒருங்கிணைப்பு அமைச்சு தெரிவித்தது.

கடந்த மார்ச் மாதம் தென்கொரியக் கடற்பரப்பில் புகுந்த வடகொரியர் இருவர் நான்கு மாதங்களாகத் தென்கொரியாவில் தங்கியிருந்தனர்.

எஞ்சிய நால்வரும் கடலோடிகள். அந்நால்வரும் கடந்த மே மாதம் சர்ச்சைக்குரிய கடல் எல்லைப் பகுதியைத் தாண்டி தென்கொரிய நீர்ப்பரப்பிற்குள் புகுந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

தென்கொரிய அதிபராக லீ ஜே மியுங் பதவியேற்றபின் வடகொரியர் நாடுகடத்தப்பட்டிருப்பது இதுவே முதன்முறை. இரு கொரிய நாடுகளுக்கு இடையிலான உறவை மேம்படுத்த அவர் முயன்று வருகிறார்.

இதற்கு முன்னரும் பலமுறை வடகொரியர்கள் தற்செயலாகத் தென்கொரிய நீர்ப்பரப்பிற்குள் புகுந்துள்ளனர். பெரும்பாலும் சிறுபடகை அவர்கள் பயன்படுத்துவதால் காற்றோட்டத்தை எதிர்த்து அவர்களால் தங்கள் நாட்டுக் கடற்பரப்பிற்குத் திரும்பிச் செல்ல முடியாமல் போய்விடுவதாகக் கூறப்படுகிறது.

கடந்த காலத்தில் அவ்வாறு தென்கொரியப் பகுதிக்குள் நுழைந்த வடகொரியர்கள் தங்கள் நாட்டிற்குத் திரும்ப விரும்பினால் நில எல்லை வழியாக அவர்களைத் திருப்பியனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

ஆயினும், பதற்றநிலை அதிகரித்ததை அடுத்து 2023 ஏப்ரலில் தென்கொரியாவுடனான தொடர்பு இணைப்புகளை வடகொரியா துண்டித்தது.

அதற்கு எட்டு மாதங்களுக்குப் பின், தென்கொரியாவுடனான ஒருங்கிணைப்பு சாத்தியமில்லை என்று வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் அறிவித்தார்.

குறிப்புச் சொற்கள்