சோல்: வகுப்பறைச் செயல்பாடுகளுக்குத் தொடர்ந்து இடையூறு தரும், மற்ற மாணவர்களுக்குத் தொல்லை தரும் மாணவர்களை வெளியேற்றவும் அவர்களின் கைப்பேசிகளைப் பறிமுதல் செய்யவும் தென்கொரிய ஆசிரியர்களுக்கு அதிகாரம் வழங்கப்படவுள்ளது.
வரும் செப்டம்பர் மாதம் முதல் இப்புதிய நடைமுறை செயல்பாட்டிற்கு வரவுள்ளது என்று தென்கொரியக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆசிரியரின் அறிவுறுத்தலுக்கு இணங்க மறுக்கும் மாணவர்களைத் தண்டிக்க அனுமதிக்கும்படி பள்ளி முதல்வரிடம் ஆசிரியர் கோரலாம் என்றும் அமைச்சு கூறியது.
தங்களது நடத்தை குறித்து மன்னிப்புக் கடிதம் எழுதித் தரும்படி மாணவர்கள் கேட்டுக்கொள்ளப்படலாம்.
தற்போது, மாணவர்களை ஆசிரியர்கள் தண்டிப்பதை மாணவர்களின் உரிமைகளுக்கான அவசரச் சட்டம் அனுமதிப்பதில்லை.
இந்நிலையில், ஆசிரியர்களின் உரிமைகளை வலுப்படுத்துவதையும் மாணவர்களின் கல்வி உரிமையைப் பாதுகாப்பதையும் புதிய கொள்கை இலக்காகக் கொண்டுள்ளது என்று அமைச்சு குறிப்பிட்டது.
தன்னுடைய விழுமியங்கள், கற்றல் சூழலுக்கு ஏற்ப, தனக்கென வழிகாட்டி நெறிமுறைகளை வகுத்துக்கொள்ள ஒவ்வொரு பள்ளிக்கும் தன்னாட்சி உரிமை வழங்கப்படும்.
கடந்த ஜூலை மாதம் தலைநகர் சோலைச் சேர்ந்த 23 வயது தொடக்கப் பள்ளி ஆசிரியர் ஒருவர், கட்டுக்கடங்காத மாணவர் ஒருவராலும் பெற்றோரிடமிருந்து பல புகார்கள் வந்ததாலும் தன்னுயிரை மாய்த்துக்கொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
தென்கொரியா முழுவதும் இந்நிகழ்வு பேரதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், புதிய கல்விக்கொள்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

