சோல்: அதிகரித்துவரும் செலவு குறித்த பெற்றோரின் கவலைக்கிடையே, முறைசார் சீருடைகளுக்கு விடைகொடுக்க தென்கொரியா முடிவெடுத்துள்ளது.
நாட்டின் நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகளின் சீருடை விலை, முறைசார் சீருடைக்கு மாற்றாக, நடைமுறைக்கு ஏதுவான சீருடைப் பயன்பாடு போன்றவை குறித்து ஆய்வு நடத்தப்பட உள்ளது.
இதையொட்டி, மார்ச் 16ஆம் தேதிமுதல் கிட்டத்தட்ட 5,700 இடைநிலை, உயர்நிலைப் பள்ளிகளைச் சோதிக்க அந்நாட்டின் கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது.
ஒரே மாதிரியான விலை, ஏலமுறை, தேர்ந்தெடுக்கப்பட்ட ஒப்பந்தக்காரர்கள், ஒப்பந்தத் தொகை ஆகியவற்றை அதிகாரிகள் மறுஆய்வு செய்வர்.
அதிபர் லீ ஜே மியுங் பள்ளிச் சீருடைக்கான செலவு அண்மையில் 600,000 வொன்னை ($527) எட்டியுள்ளது என்று கூறியதுடன் விலை நடைமுறைகளை ஆராயுமாறு சம்பந்தப்பட்ட அமைச்சுகளை அறிவுறுத்தினார்.
தற்போது 17 பெருநகரம், மாநில கல்வி அலுவலகங்கள் இணைந்து முறைசார் சீருடைகளுக்கான ஆண்டு விலை உச்சவரம்பை நிர்ணயித்துள்ளன. 2026ன் உச்சவரம்பு 2025ன் 344,530 என்ற அளவில் உள்ளது. எனினும், முறைசார் சீருடைக்கு மட்டுமே இந்த உச்சவரம்பு பொருந்தும். விளையாட்டு உடை, டீ சட்டை போன்ற மற்ற உடைகளைச் சேர்க்கும்போது, மொத்தச் செலவு பெரும்பாலும் 600,000 வோன்களைத் தாண்டும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
டி-சட்டை, காற்சட்டை, அன்றாடம் அணியும் உடை ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே விலை உச்சவரம்பை 2026ஆம் ஆண்டின் முதல் பாதியில் நிர்ணயிக்க அமைச்சு திட்டமிட்டுள்ளது.
முறைசார் சீருடைகளை கட்டாமாக்குவதைத் தவிர்க்கவும் விளையாட்டு உடை அல்லது சாதாரணச் சீருடைகளுக்கு மாறவும் பள்ளிகள் ஊக்குவிக்கப்படும்.
தொடர்புடைய செய்திகள்
தென்கொரியாவில் நீண்ட காலமாக, முறைசார் வடிவமைப்பு, கண்டிப்பான ஆடைவிதிகளுடன், பள்ளிச் சீருடைகள் ஒழுக்கத்தையும் பள்ளியின் தனித்தன்மையையும் வெளிப்படுத்துவதாக இருந்து வருகின்றன.
அண்மை ஆண்டுகளில் மாணவர் உரிமைகளுக்கு முக்கியத்துவம் அதிகரித்து வருகின்றன.
இவ்வேளையில், ஆடை விதிமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளன. அத்துடன், அதிகமான பள்ளிகள் நடைமுறைக்கேற்ற சீருடைக்கு மாறியுள்ளன.
சீருடை கொள்முதலுக்கான நிதி ஆதரவைப் பன்மயப்படுத்தவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள 17 கல்வி அலுவலகங்களில் 13, தற்போது 300,000 முதல் 400,000 வொன் வரை ஆதரவு வழங்குகிறது. இது பொதுவாக முறைசார் சீருடைக்கானது. புதிய திட்டத்தின்படி, மாணவர்கள் தேவையானவற்றைத் தேர்ந்தெடுக்க அனுமதிக்கும் வகையில் ரொக்கமாகவோ அல்லது பற்றுச்சீட்டுப் படிவத்திலோ உதவி வழங்கப்படும்.
2015ல் அறிமுகமான பள்ளியின்கீழ் சீருடை வாங்கும் முறையும் மறுஆய்வு செய்யப்பட உள்ளது. தரத்தை உயர்த்தி, செலவைக் குறைக்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட அம்முறையில், சீருடை தயாரிப்பாளர்களிடையே ஒப்பந்தப் போட்டி முறைகேடு நடைபெறுவது குறித்து அக்கறை தெரிவிக்கப்பட்டுள்ளது.

