சோல்: நிலவில் தரையிறங்குவது உட்பட ஏழு முக்கிய தொழில்நுட்ப உத்திகளை தென்கொரியா புதன்கிழமை (ஆகஸ்ட் 12) அறிவித்துள்ளது.
அவற்றில் அணு சக்தி, அதிவிரைவு (குவான்டம்) கணினி செயல்பாடு, விண்வெளி ஆய்வு, உயிரியல் தொழில்நுட்பம் ஆகியன முக்கிய அங்கம் வகிக்கின்றன. பகுதிமின்கடத்தித் துறை, செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றைச் சார்ந்த திறன்களைக் கடந்து புதிய வளர்ச்சிப் பாதையில் செல்ல அந்நாடு அதன் இலக்குகளை வடிவமைத்துள்ளது.
அந்த ஏழு பெரும் திட்டங்கள் அதிபர் லீ ஜே மியுங் தலைமையேற்ற கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
2035ஆம் ஆண்டுக்குள் வர்த்தகமயமாக்கப்பட்டு செயல்படும் சிறிய அளவிலான அணுசக்தி ஆலைகள், நிலவில் 2030ஆம் ஆண்டுக்குள் தரையிறங்கும் திட்டம், 2029 ஆம் ஆண்டுக்குள் 100 ‘கியூபிட்’ அளவு ஆற்றல் மிகுந்த கணினி மேம்பாடு, 2035 ஆம் ஆண்டுக்குள் மனித மூளையுடன் நேரடித் தொடர்பை ஏற்படுத்தக்கூடிய கணினியை வர்த்தகமயமாக்குதல் போன்ற ஒன்றுடன் ஒன்று ஒருங்கிணைந்த இலக்குகள் அக்கூட்டத்தில் முன்வைக்கப்பட்டன.
பகுதிமின்கடத்தித்துறையிலும் செயற்கை நுண்ணறிவுத் திறனிலும் ஏற்பட்டிருக்கும் அதிவேக வளர்ச்சி, வாய்ப்புகளைப் பயன்படுத்தி நாட்டின் அடுத்த கட்ட முன்னேற்றத்துக்கான வழிவகைகளைக் கண்டறியவேண்டும் என்று அதிபர் லீ கூறினார்.
“இன்று நாம் ஆய்வு செய்யும் ஏழு இலக்குகள், எதிர்காலத் தலைமுறையினரின் வளர்ச்சிக்கு வழிகாட்டுவதோடு நாட்டின் முக்கியத் தேசிய உத்திப்பூர்வச் சொத்துகளாக அமையும்,” என்றும் அதிபர் வலியுறுத்தினார்.
தென்கொரியா அடையாளம் கண்டுள்ள இலக்குகள் அணுசக்தி, ஒருங்கிணைக்கப்பட்ட அணு ஆற்றல், அடுத்த தலைமுறைக்கான புதுப்பிக்கத்தக்க ஆற்றல், அதிவிரைவு கணினி, விண்வெளி, வான்வழி போக்குவரத்து, அத்தியாவசிய கனிமவளங்களுடன் பல்வேறு பொருள்களுக்கான விநியோகத் தொடர் ஆகியவை என்று அறிவியல் அமைச்சர் பெய் கியங் ஹூன் விளக்கமளித்தார்.
நாட்டின் வளர்ச்சி மந்தமடைந்து, வேலைக்குச் செல்லும் வயதினர் குறைந்துள்ள வேளையில் அரசாங்கம் இந்த ஏழு அம்சத் திட்டத்தை வெளியிட்டுள்ளது.
புதிதாக அறிமுகம் காணும் அதிநவீனத் தொழில்நுட்பத்துடன் போட்டித்தன்மையுடன் செயல்பட்டு அதில் தென்கொரியா தனியிடத்தைப் பிடிப்பதோடு அதன் பொருளியல் வளர்ச்சிக்கும் தேசிய பாதுகாப்புக்கும் இந்தத் திட்டம் முக்கியமானது என்று கருதப்படுகிறது.
“இந்த ‘விதைகள்’ பயிரிடப்பட்டு, வளர்ந்து யாரும் எட்டமுடியாத நிலையை இன்னும் 10 முதல் 20 ஆண்டுகளில் தென்கொரியா அடைய நாங்கள் உதவுவோம்,” எனவும் அமைச்சர் பெய் கூறினார்.


