சோல்: தென்கொரியாவில் அரசியல் குற்றம் சுமத்தப்பட்டு தற்காலிகமாகப் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ள அதிபர் யூன் சுக் இயோலின் ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர், ஜனவரி 19ஆம் தேதி, நீதிமன்றக் கட்டடத்துக்குள் அத்துமீறி நுழைவது நேரலையில் காட்டப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் 3ஆம் தேதி நாட்டில் ராணுவ ஆட்சிச் சட்டத்தை அமல்படுத்தியது தொடர்பில் திரு யூனுக்கு அதிகாரபூர்வக் கைதாணையை அந்த நீதிமன்றம் பிறப்பித்தது. இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தென்கொரிய ‘ராக்’ இசைப் பாடகரான சோய் ஜின் ஹோவைக் கிட்டத்தட்ட 150,000 பேர் சமூக ஊடகத்தில் பின்தொடர்கின்றனர். சோல் மேற்கு மாவட்ட நீதிமன்றக் கட்டடத்தில் யூனின் மற்ற ஆதரவாளர்களுடன் சேர்ந்து தானும் நுழைவதை இவர் நேரலையில் காட்டினார்.
ஏழு மணி நேரம் ஒளிபரப்பான நேரலையில், யூன் ஆதரவாளர்கள் தீயணைப்பு கருவியைப் பயன்படுத்தி கதவு, சன்னல்களை உடைத்து, நீதிமன்றக் கட்டடத்தின் மாடிப்படிகளில் ஏறுவது உள்ளிட்ட காட்சிகள் இடம்பெற்றன.
ஆதரவாளர்கள் அனைவரையும் மேலே வரும்படி ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருவர் உரக்கக் கத்துவதும் அதில் கேட்டது.
இந்த வன்முறைச் சம்பவம் குறித்துத் திரு யூன் அதிர்ச்சியும் கோபமும் அடைந்திருப்பதாக அவரது வழக்கறிஞர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
அமைதியான முறையில் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தும்படிப் பொதுமக்களையும் பொறுமை காக்கும்படிக் காவல்துறையினரையும் திரு யூன் கேட்டுக்கொண்டதாக வழக்கறிஞர் சொன்னார்.
தென்கொரிய அதிபர் ஒருவர் தமது பதவிக்காலத்தின்போதே கைது செய்யப்படுவது இதுவே முதன்முறை. அவர் தற்காலிகமாகப் பதவி நீக்கம் செய்யப்பட்டபோதும், அரசியல் குற்றச்சாட்டு தொடர்பில் தென்கொரிய அரசமைப்பு நீதிமன்றம் தீர்ப்பளிக்கும்வரை அவரே நாட்டின் அதிபராகக் கருதப்படுவார்.
தொடர்புடைய செய்திகள்
தடுப்புக் காவல் நிலையத்தில் இருந்தபடியே இறுதிவரை போராடப்போவதாகச் சூளுரைத்துள்ளார் திரு யூன்.
ஆடம்பரமான வீட்டில் சொகுசு வாழ்க்கை மேற்கொண்டிருந்த அவர், இப்போது 9.9 சதுர அடி கொண்ட சிறை அறையில் தனியாக உள்ளார். எளிமையான உணவு வகைகளை உண்டு, அவர் தரையில் படுத்துறங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆடம்பர விருந்துபசரிப்புக்குப் பெயர்பெற்ற அவர் சிறைச்சாலை உணவையே உண்பதாகக் கூறப்பட்டது.
அரசியல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஆயுள் தண்டனையோ மரண தண்டனையோ விதிக்கப்படலாம்.