தேர்வுக்கான கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கும் தென்கொரியா

தேர்வுக்கான கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கும் தென்கொரியா

படம்: ஏஃப்பி

24 Nov 2026 - 6:33 pm

2 mins read

சோல்: தென்கொரியா, உயர்நிலைப் பள்ளிகளில் உலோகங்களைக் கண்டறியும் 8,000 கருவிகளைப் பயன்படுத்தவிருக்கிறது.

தேசிய அளவில் தொடங்கி வகுப்பறைகள் வரை நடைபெறும் தேர்வுகளில் செயற்கை நுண்ணறிவின் துணையுடன் மாணவர்கள் மோசடியில் ஈடுபடும் நிலை அதிகரித்துள்ளதை அடுத்து அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

மேலும், மோசடி செய்யும் மாணவர்களுக்குத் தண்டனையாக பள்ளிகளிலிருந்து அவர்களை நீக்குவதற்கும் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகளிலிருந்து பத்து ஆண்டுகள் வரை தடை செய்வதற்குமான நடைமுறைகள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

உயர்நிலைப் பள்ளியின் இறுதித் தேர்வுகளுக்கு முன் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 24) தென்கொரியக் கல்வியமைச்சு அதுகுறித்து அறிவித்தது.

தேர்வுகள் எழுதும் மாணவர்களிடையே செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் செயல்படும் கண்ணாடி போன்ற அதிநவீன தொழில்நுட்பக் கருவிகளின் பயன்பாடு அதிகரித்துள்ளதால் ஒருசில பள்ளிகள் கட்டுப்பாடுகளை மேலும் வலுப்படுத்தியுள்ளன.

இந்நிலையில், நாட்டில் உள்ள 2,387 உயர்நிலைப் பள்ளிகளுக்கு உலோகங்களை அடையாளம் காணும் 7,989 கருவிகளைத் தென்கொரிய அரசாங்கம் வழங்கவிருக்கிறது.

தேர்வுகள் தொடங்கும் முன் மாணவர்கள் அனைவரும் கூடுதல் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவர்.

தேர்வு நடைபெறும் அறைகளிலிருந்து மாணவர்களின் பைகள் குறைந்தது 50 மீட்டர் தூரத்தில் வைக்கப்படவேண்டும். அத்துடன், தேர்வுகளை நடத்துவோர் மாணவர்களின் கண்ணாடிகளையும் அவர்கள் அணிந்திருக்கும் ஆடைகளையும் சோதனையிடுவர்.

தேர்வு நடத்தப்படும் பள்ளிகளில் ‘வைஃபை’ இணைப்புகள் துண்டிக்கப்படும்.

அறிவார்ந்த தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தி மோசடி செய்து பிடிபடும் மாணவர்களுக்கு அனைத்து பாடங்களிலும் மதிப்பெண்கள் வழங்கப்படாது.

அத்தகைய மாணவர்கள், பள்ளியிலிருந்து இடைநீக்கம் செய்யப்படலாம் அல்லது முழுமையாக நீக்கப்படலாம்.

இதே கட்டுபாடுகள் பல்கலைக்கழகங்கள் நிர்வகிக்கும் நுழைவுத் தேர்வுகளுக்கும் பின்பற்றப்படும்.

குறிப்புச் சொற்கள்