ஆளில்லா வானூர்திகளை இயக்க 500,000 அதிகாரிகளுக்குத் தென்கொரியா பயிற்சி

ஆளில்லா வானூர்திகளை இயக்க 500,000 அதிகாரிகளுக்குத் தென்கொரியா பயிற்சி

2 mins read
751b3716-ab09-4e2c-98e6-ecfaabac9169
2029ஆம் ஆண்டுக்குள் 110,000 ஆளில்லா வானூர்திகளை உருவாக்க தென்கொரிய ராணுவம் திட்டமிட்டுள்ளது. - படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

சோல்: வடகொரியாவை எதிர்கொள்வதற்காக, தென்கொரியா அதன் ஆளில்லா வானூர்தி, ஆளில்லா வானூர்தி எதிர்ப்பு ஆற்றல்களை அதிவிரைவில் விரிவுபடுத்த உள்ளதாக தென்கொரியத் தற்காப்பு அமைச்சு வெள்ளிக்கிழமை (ஜூன் 26) தெரிவித்துள்ளது.

அதன் ஒரு பகுதியாக, ஆளில்லா வானூர்திகளை இயக்க, அது 500,000 அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்க இருப்பதுடன், பல்லாயிரக்கணக்கான ஆளில்லா வானூர்தி முறைகளை முன்வரிசை ராணுவப் பிரிவுகளுக்கு விநியோகிக்க உள்ளதாகவும் அமைச்சு கூறியது.

ஆயுதப்படை, கடற்படை, ஆகாயப்படை, கடல்துறை ஆகியவற்றில் பயன்படுத்துவதற்காக, 2029ஆம் ஆண்டிற்குள் 110,000 ஆளில்லா வானூர்திகளை உருவாக்கத் தென்கொரிய ராணுவம் திட்டமிட்டுள்ளது.

அதன் மூலம், ஒவ்வொரு தனிப்பட்ட ராணுவ வீரருக்கும் ஆளில்லா வானூர்தியை ஒரு நிலையான பொருளாக மாற்றுவதைத் தென்கொரியா நோக்கமாகக் கொண்டுள்ளது.

“ஆளில்லா வானூர்திகள் இனி ஒரு சில குறிப்பிட்ட ராணுவப் பிரிவுகளால் மட்டுமே பயன்படுத்தப்படும் கருவிகளாக இருக்கக்கூடாது; அவை அனைவராலும் பயன்படுத்தப்படும் ஒரு போர்க் கருவியாக மாற வேண்டும்,” என்று தற்காப்பு அமைச்சர் அன் கியூ பேக் செய்தியாளர் கூட்டம் ஒன்றில் தெரிவித்தார்.

மேலும், ராணுவப் படையினர் அவற்றைத் தங்களது இரண்டாவது தனிப்பட்ட ஆயுதமாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பாதுகாப்புக் கவலைகளைக் கருத்தில் கொண்டு, அந்த ஆளில்லா வானூர்திகளை உருவாக்குவதற்குச் சீனப் பாகங்களைச் சார்ந்திருக்காமல், 100 விழுக்காடு உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பாகங்களை மட்டுமே தென்கொரியா பயன்படுத்தும் என்று திரு அன் தெரிவித்தார்.

உக்ரேன், மத்திய கிழக்கு நாடுகளின் போர்களிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையில், இரு கொரியாக்களும் அவற்றின் ஆளில்லா வானூர்தி ஆற்றல்களை மேம்படுத்தும் முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ள சூழலில் அண்மைய அறிவிப்பு வந்துள்ளது.

அந்தப் போர்களில், ஆளில்லா வானூர்தி முறைகள் போர்க்களத்தின் போக்கையே மாற்றியமைக்கும் முக்கியக் காரணிகளாக உருவெடுத்துள்ளன.

குறிப்புச் சொற்கள்
வடகொரியாதென் கொரியாஆளில்லா வானூர்தி