சோல்: நெட்டோட்டத்தில் (marathon) பங்கேற்ற 25 வயது இளையர்மீது சரக்கு வாகனம் மோதியதில் அவர் மூளைச்சாவு அடைந்தார்.
அவ்விபத்து தென்கொரியாவின் வடக்கு சுங்சியோங் மாநிலத்தில் நேர்ந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்த நெட்டோட்டம் ஒக்சியோனில் திங்கட்கிழமை (நவம்பர் 10) நடந்தது.
காலை 10 மணியளவில் இரண்டு தடங்கள் கொண்ட சாலையில் அவர் ஓடிக்கொண்டிருந்தபோது, முதலாம் தடத்திலிருந்து இரண்டாம் தடத்திற்குத் திடீரென மாறிய சரக்கு வாகனம் அவர்மீது மோதியது. இரண்டாம் தடம் நெட்டோட்டத்திற்காக மூடப்பட்டிருந்தது என்று காவல்துறையினரும் தீயணைப்புத் துறையினரும் தெரிவித்தனர்.
ஓடிய திடல்தட வீரர்களுக்கு 20-30 மீட்டர் முன்பாகக் காவல்துறைச் சுற்றுக்காவல் காரும் சென்றுகொண்டிருந்தது.
தலையில் கடுமையாகக் காயமுற்ற அந்த இளையர், டேஜியோனில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். பின்னர் அவர் மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்டு, உயிர்காப்புக் கருவிகளின் துணையுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பாதிக்கப்பட்ட இளையர் திறமையான விளையாட்டாளர் என்றும் கடந்த ஆகஸ்ட் மாதம் சியோங்ஜு நகர மண்டபத் திடல்தடக் குழுவில் இணைந்தபின் பல நெட்டோட்டங்களில் சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தினார் என்றும் கூறப்பட்டது.
விபத்தை ஏற்படுத்திய வாகனத்தின் ஓட்டுநர் 80களில் இருக்கும் முதியவர் என்றும் விபத்து நேர்ந்தபோது அவர் மதுபோதையில் இல்லை என்றும் காவல்துறை தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
காவல்துறை விசாரித்தபோது, தான் அந்த இளையரைப் பார்க்கவில்லை என்று அவர் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது.
விபத்திற்கான உண்மையான காரணத்தை அறிய தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.
“அந்தச் சரக்கு வாகனத்திற்கு முன்னால் பல வாகனங்கள் சென்றுகொண்டிருந்தன. ஆயினும், அந்நேரத்தில் அவ்வளவாகப் போக்குவரத்து நெரிசல் இல்லை,” என்று காவல்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

