சோல்: மத்தியக் கிழக்கில் பதற்றநிலை அதிகரித்துவரும் வேளையில், இஸ்ரேல், லெபனான் நாடுகளில் உள்ள தன் குடிமக்கள் முடிந்த அளவிற்கு விரைவில் அங்கிருந்து வெளியேறும்படி தென்கொரிய வெளியுறவு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
கடந்த வாரம் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டார். இஸ்ரேலே அதற்குக் காரணம் என ஈரான் உள்ளிட்ட நாடுகளும் அமைப்புகளும் குற்றம் சாட்டி வருகின்றன. ஆனால், அத்தாக்குதலுக்கு இஸ்ரேல் இன்னும் பொறுப்பேற்கவில்லை.
ஆயினும், ஹனியே கொல்லப்பட்டதற்கு ஹிஸ்புல்லா உள்ளிட்ட ஈரான் ஆதரவு பெற்ற அமைப்புகள் பழி தீர்க்க உறுதிபூண்டுள்ளதால் அவ்வட்டாரத்தில் போர் மேகம் சூழ்ந்துள்ளது.
இந்நிலையில், அங்கிருந்து தென்கொரியர்களை வெளியேறும்படி அந்நாட்டு அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இஸ்ரேலில் 500க்கும் மேற்பட்ட தென்கொரியர்களும் லெபனானில் கிட்டத்தட்ட 120 பேரும் இருப்பதாக தென்கொரிய வெளியுறவு அமைச்சுத் தரவுகள் குறிப்பிடுகின்றன.
இந்நிலையில், “போர்நிறுத்தம், பிணைக்கைதிகள் விடுவிப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகள் மூலம் மத்தியக் கிழக்கில் பதற்றநிலையைத் தணிக்கும் அரசதந்திர முயற்சிகள் தொடரும் என்று தென்கொரியா நம்புகிறது,” என்று வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் லீ ஜே வூங் தெரிவித்துள்ளார்.