தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரஷ்யாவுக்கும் வடகொரியாவுக்கும் இடையிலான ஒப்பந்தத்திற்கு சோல், வாஷிங்டன் கண்டனம்

3 mins read
6b5784ec-995f-4a89-bcb1-7f3f4a8ed34e
தென்கொரிய வெளியுறவு அமைச்சர் சோ டே-யுல் (இடம்), அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன். - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

சோல்: ரஷ்யாவுக்கும் வடகொரியாவுக்கும் இடையிலான புதிய ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சோலில் உள்ள ரஷ்யத் தூதருக்கு அழைப்பாணை விடுத்துள்ளதாகத் தென்கொரிய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

தென்கொரியாவுக்கான ரஷ்யத் தூதர் அமைச்சின் கட்டடத்துக்குள் சென்றதாக அதை நேரில் பார்த்த ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

ரஷ்யத் தூதர் ஜார்ஜி ஸைனொவீவிடம், ரஷ்யாவுக்கும் வடகொரியாவுக்கும் இடையிலான புதிய ஒப்பந்தம், ராணுவ ஒத்துழைப்பு ஆகியவை குறித்த சோலின் நிலைப்பாட்டைத் தென்கொரியாவின் வெளியுறவு முதல் துணை அமைச்சர் கிம் ஹோங் கியுன் எடுத்துரைத்ததாகத் தென்கொரிய வெளியுறவு அமைச்சு கூறியது.

முன்னதாக, இந்த ஒப்பந்தம் வட்டார அமைதிக்கும் நிலைத்தன்மைக்கும் கடுமையான மிரட்டலாக விளங்குவதாகத் தென்கொரிய, அமெரிக்க வெளியுறவு அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

தென்கொரிய வெளியுறவு அமைச்சர் சோ டே-யுல்லும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கனும் அவ்வாறு கண்டனம் தெரிவித்ததாகத் தென்கொரிய வெளியுறவு அமைச்சு வெள்ளிக்கிழமை (ஜூன் 21) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இரு அமைச்சர்களும் வியாழக்கிழமை தொலைபேசி வழியாக உரையாடினர். மாஸ்கோவும் பியோங்யாங்கும் செய்துகொண்ட ஒப்பந்தத்திற்குப் பதிலளிக்கும் வழிகள் குறித்து இருவரும் கலந்துரையாடியதாகத் தெரிவிக்கப்பட்டது.

மேலும், நிலைமையை அணுக்கமாகக் கண்காணிக்கவும் இரு அமைச்சர்களும் இணங்கியதாகத் தென்கொரிய வெளியுறவு அமைச்சு கூறியது.

புதிய ஒப்பந்தத்தின்கீழ், ரஷ்யாவோ வடகொரியாவோ ராணுவ மிரட்டல்களை எதிர்நோக்கினால், உடனடியாக ராணுவ உதவி வழங்க பியோங்யாங்கும் மாஸ்கோவும் இணக்கம் கண்டுள்ளன.

இதன் தொடர்பில் தென்கொரியா மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா ஆதரவு தரும் என்று திரு பிளிங்கன் கூறியுள்ளார்.

வடகொரியாவின் ராணுவத் திறனை வலுப்படுத்த வழங்கப்படும் எந்தவோர் ஆதரவு நடவடிக்கையும் ஐக்கிய நாட்டுப் பாதுகாப்பு மன்றத் தீர்மானங்களை மீறுவதாகும் என்று திரு சோ கூறியதாக அமைச்சின் அறிக்கை குறிப்பிட்டது.

அனைத்துலக அமைதிக்கும் நிலைத்தன்மைக்கும் ரஷ்யாவும் வடகொரியாவும் விடுத்துள்ள மிரட்டலுக்குப் பதிலளிக்கும் பல்வேறு வழிகள் குறித்து அமெரிக்கா பரிசீலிக்கும் என்று அமைச்சர் பிளிங்கன் கூறியதாகத் தென்கொரிய அமைச்சு கூறியது.

முன்னதாக, ரஷ்யாவுக்கும் வடகொரியாவுக்கும் இடையிலான ஒப்பந்தத்திற்கு பதிலடி தரும் விதமாக, உக்ரேனுக்கு ஆயுதம் வழங்குவது குறித்து சோல் மறுஆய்வு செய்யவிருப்பதாகத் தென்கொரிய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சாங் ஹோ ஜின் வியாழக்கிழமை கூறினார்.

ரஷ்யாவுக்கு எதிராகத் தென்கொரியா உக்ரேனுக்கு ஆயுதங்கள் வழங்கினால் அது ‘மிகப் பெரிய தவறிழைக்கப்பட்டதாகும்’ என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் எச்சரித்துள்ளார்.

தமது வியட்னாமியப் பயணத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.

இதற்கிடையே, ஜூன் 20ஆம் தேதி காலை வடகொரிய வீரர்கள் சிலர் இரு கொரியாக்களுக்கும் இடையிலான எல்லையைக் கடந்ததால் தென்கொரிய ராணுவம் அவர்களை எச்சரிக்கும் விதமாகச் சுட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதையடுத்து வடகொரிய வீரர்கள் பின்வாங்கியதாகத் தென்கொரியாவின் ஆயுதப்படைத் தலைவர்கள் குழு (ஜேசிஎஸ்) தெரிவித்தது.

ஜூன் 20ஆம் தேதி காலை 11 மணியளவில் (சிங்கப்பூரில் காலை 10 மணி) வடகொரிய வீரர்கள் இரு கொரியாக்களுக்கும் இடையிலான ராணுவமற்ற பகுதியின் மத்தியிலுள்ள எல்லையைக் கடந்ததாகக் கூறப்பட்டது. ஜூன் மாதத்தில் நடந்த இத்தகைய மூன்றாவது சம்பவம் இது.

குறிப்புச் சொற்கள்