சோல்: இம்மாதத்தின் அடுத்த இரண்டு வாரங்களைச் சிறப்பு அவசர உதவி காலமாக தென்கொரியா வியாழக்கிழமையன்று (செப்டம்பர் 12) அறிவித்துள்ளது. அந்நாட்டில் பயிற்சி மருத்துவர்கள் பல்கலைக்கழகங்களில் மருத்துவர்கள் சேர்க்கை எண்ணிக்கையை அரசாங்கம் அதிகரிப்பதை எதிர்த்துப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனால் அங்கு சுகாதார நெருக்கடி அதிகரித்திருப்பதால், மருத்துவச் சேவையை உறுதிப்படுத்தத் தங்களிடம் இருக்கும் அனைத்து வளங்களையும் பயன்படுத்தப் போவதாகத் தென்கொரியா கூறியுள்ளது.
“மருத்துவ நிபுணர்களின் சேவையையும் அர்ப்பணிப்பையும் அங்கீகரித்து அவர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில், தேசிய விடுமுறைக் காலமான அடுத்த வாரத்தில் மருத்துவக் காப்புறுதியிலிருந்து மருத்துவர்கள் பெறும் கட்டணத்தை அரசாங்கம் தற்காலிகமாக உயர்த்தும்,” என்று தென்கொரியப் பிரதமர் ஹான் டக்-சூ தெரிவித்தார்.
வட்டார அவசர மருத்துவ உதவி நிலையங்களில் பணியாற்றும் குறிப்பிட்ட பிரிவில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்களின் சேவைக் கட்டணத்தை 3.5 மடங்கு உயர்த்துவதும் இதில் அடங்கும் என்றார் அவர்.
தென்கொரியாவின் மிகப்பெரிய விடுமுறைக் காலங்களில் ஒன்றான அடுத்த வாரம் வரும் தேசிய விடுமுறை நாள்களில், தினமும் சுமார் 8,000 மருந்தகங்களும் மருத்துவமனைகளும் நாடு முழுவதும் திறந்திருக்கும் என்று திரு ஹான் கூறினார்.
ஏற்க்குறைய 3,600 மருந்தகங்களும் மருத்துவமனைகளும் இவ்வாண்டின் தொடக்கத்தில் வந்த சந்திரப் புத்தாண்டு விடுமுறையின்போது மருத்துவ சேவையாற்றியதை அவர் குறிப்பிட்டார்.
விடுமுறை நாள்களில் மருத்துவமனைகளுக்குச் செல்வதைத் தவிர்த்து, நோயின் அறிகுறிகளின் தீவிரத்தைப் பொறுத்து உள்ளூர் மருந்தகங்களுக்குச் செல்லுமாறு திரு ஹான் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.
மருத்துவ ஊழியர்களின் பற்றாக்குறையைப் போக்க, சில மருத்துவமனையின் அவசரச் சிகிச்சைப் பிரிவுக்கு ராணுவ மருத்துவர்களை அனுப்பியதாகத் தென்கொரியச் சுகாதார அமைச்சு கடந்த வாரம் கூறியது.
தொடர்புடைய செய்திகள்
இருப்பினும், சில மருத்துவர்கள் அந்நாட்டுச் சுகாதார அமைப்பு நெருக்கடியில் இருப்பதாக எச்சரித்தனர்.