சோல்: தென்கொரிய அதிபர் மாளிகை, ஹோர்முஸ் நீரிணையில் இம்மாதம் (மே) சரக்குக் கப்பலொன்று தாக்கப்பட்டதற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தாக்கியது யார் என்று தெரிந்த பிறகு தகுந்த பதிலடி கொடுக்கத் திட்டமிட்டுள்ளதாக அது கூறியது.
கப்பலின் பின்புறத்தில் சேதம் ஏற்பட்டது முதற்கட்டத் தடயவியல் சோதனையில் தெரியவந்ததாக நிபுணர்கள் கூறியுள்ளனர். தாக்குதலின் காரணமாகக் கப்பலின் இயந்திர அறையில் தீப்பற்றியது.
‘நாமு’ எனும் அந்தக் கப்பலைக் கொரியாவின் எச்எம்எம் நிறுவனம் இயக்கிவருகிறது. ஐக்கிய அரபுச் சிற்றரசுகளின் கடற்பகுதியில் கப்பல் சென்றபோது எந்தவொரு விதிமுறையையும் மீறவில்லை என்று தென்கொரிய அதிபர் மாளிகையின் அதிகாரி கூறினார். வணிகக் கப்பல்மீது நடத்தப்பட்ட தாக்குதலை நியாயப்படுத்த முடியாது என்றும் அவர் சொன்னார்.
ஈரானுக்கு அந்தத் தாக்குதலில் பங்கு எதுவும் இருக்குமா என்பதுபற்றி எதுவும் தெரியவில்லை என்று அதிகாரி தெரிவித்தார்.
இந்நிலையில் டெஹ்ரான், கப்பலின் பக்கவாட்டில் ஏற்பட்ட கடுமையான தாக்குதலுக்குத் தான் காரணமல்ல என்று கூறியிருக்கிறது.
தென்கொரியாவில் உள்ள ஈரானியத் தூதரகம், அந்த விவகாரம் குறித்து ஏதேனும் விவரம் தெரிந்தால் சொல்வதாகக் குறிப்பிட்டது.
இதற்கிடையே, தென்கொரியக் கப்பலைத் தாக்கியது ஈரான்தான் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியுள்ளார். நீரிணையில் கப்பல் போக்குவரத்தைச் சீராக்க அமெரிக்காவுடன் சேர்ந்து பணியாற்றுமாறு அவர் சோலைக் கேட்டுக்கொண்டார்.

