வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் அணுவாயுதத் திட்டத்தை முடக்குவதில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்புடன் இணக்கம் கண்டால் அதனை ஏற்கப்போவதாகத் தென்கொரிய அதிபர் லீ ஜே மியுங் கூறியுள்ளார்.
அணுவாயுதங்களை முற்றாக அகற்ற வேண்டும் என்று கோருவதைக் காட்டிலும் இடைக்கால நெருக்கடி நடவடிக்கையாக அவற்றின் உற்பத்தியை முடக்கலாம் என்றார் அவர்.
அமெரிக்க, வடகொரியத் தலைவர்களு இடையில் நம்பிக்கை இருப்பதைப் போன்று தோன்றுதால் மீண்டும் அவர்கள் சந்திக்கச் சாத்தியம் உள்ளது எனத் தாம் கருதுவதாகத் திரு லீ சொன்னார். அத்தகைய சந்திப்பு தென்கொரியாவுக்கு மட்டுமல்ல உலக அமைதிக்கும் பாதுகாப்புக்கும்கூட உதவியாக இருக்கும் என்றார் அவர்.
வடகொரியா ஆண்டுக்குக் கூடுதலாக 15 முதல் 20 அணுவாயுதங்கள்வரை தயாரிப்பதாகத் திரு லீ சொன்னார். இப்போதைய நிலையில் அணுவாயுதக் களைவுக்குப் பதிலாக அத்தகைய இடைக்கால நடவடிக்கை எட்டப்படக்கூடியது என்றார் அவர்.
தென்கொரியத் தலைவர் பிபிசி ஊடகத்திற்கு அளித்த நேர்காணலில் அந்தத் தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.
வடகொரியா 2022ஆம் ஆண்டு அதனை அணுவாயுத வல்லமை பெற்ற நாடாக அறிவித்துக்கொண்டது. அணுவாயுதங்களை ஒருபோதும் களையப்போவதில்லை என்றும் அது அப்போது கூறியிருந்தது.
வடகொரியா அணுவாயுதங்களைக் கைவிட இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. 2019ஆம் ஆண்டுக்குப் பிறகு அதுகுறித்த பேச்சுக்குத் திரும்புவதையும் பியோங்யாங் நிராகரித்துவிட்டது.
ஜூன் மாதம் தென்கொரிய அதிபராகப் பொறுப்பேற்ற திரு லீ, வடகொரியாவுடன் அமைதியான உறவை நிறுவ விரும்புகிறார். முன்னைய அதிபர் யூன் சுக் இயோலின் ஆட்சிக்காலத்தில் அதிகரித்திருந்த பதற்றத்தைத் தணிக்கவும் எண்ணுகிறார் தென்கொரிய அதிபர்.