சோல்: தென்கொரியாவில் அரசியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, அதிபர் பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட யூன் சுக் இயோல், உய்வாங் நகரிலுள்ள சோல் தடுப்புக் காவல் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.
தென்கொரிய அதிபர் ஒருவர் தமது பதவிக்காலத்தின்போதே குற்றவியல் விசாரணைக்காகத் தடுத்துவைக்கப்பட்டது இதுவே முதன்முறை.
சந்தேகத்துக்குரியவர்கள் தற்காலிகமாகத் தடுத்து வைக்கப்படும் 19 சதுர அடி பரப்பளவுள்ள அறையில் அவர் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய தடுப்புக்காவல் ஆணையின்கீழ், திரு யூனை அதிகபட்சமாக 48 மணி நேரம் வரை தடுத்துவைக்க முடியும். உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை (ஜனவரி 17) காலை 10.30 மணிக்கு (சிங்கப்பூரில் காலை 9.30 மணி) அந்த ஆணை முடிவுக்கு வரும்.
அதிகாரபூர்வக் கைதாணையின் மூலம் தடுப்புக்காவல் நீட்டிக்கப்பட்டால், வழக்கமான சிறைக்கு அவர் மாற்றப்படுவார்.
குற்றஞ்சாட்டப்படும் வரை 20 நாள்கள் வரை அவரைச் சிறையிலடைக்க முடியும்.
தென்கொரியத் தடுப்புக் காவல் நிலையங்களில் சிறைக்கைதிகள் ஒன்றுக்கும் மேற்பட்டோர் ஒரே அறையில் தங்குவது வழக்கம் என்றபோதும் முன்னாள் அதிபர்கள் பார்க் குன் ஹே, லீ மியொங் பாக் இருவரும் குற்றம் சாட்டப்பட்டபோது தாங்களாகவே தனியறையைத் தங்களுக்கு ஒதுக்கிக்கொண்டனர்.
எனவே, நீதிமன்றம் தடுப்புக்காவலை 48 மணி நேரத்துக்கு அப்பால் நீட்டித்து ஆணை பிறப்பித்தால் திரு யூனும் சோல் தடுப்புக்காவல் நிலையத்தில் தமக்கு ஓர் அறையை ஒதுக்கிக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.