சோல்: தென்கொரியாவில் கடந்த டிசம்பர் மாதம் விபத்துக்குள்ளாகிய போயிங் விமானத்தின் இரண்டு இயந்திரங்களில் புலனாய்வுத் துறை அதிகாரிகள் பறவை இறகுகளையும் ரத்தத்தையும் கண்டதாக விசாரணையில் சம்பந்தப்பட்ட ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
ஜேஜு ஏர் 7C2216 ரக விமானம் தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கிலிருந்து தென்கொரியாவின் முவான் பகுதிக்குச் சென்றுகொண்டிருந்தது. விமான நிலையத்தில் தரையிறங்கியபோது, ஓடுபாதையில் உள்ள சுவரை மோதி விமானம் தீப்பற்றிக்கொண்டது.
மொத்தம் 179 பேர் உயிரிழந்தனர். தென்கொரிய மண்ணில் நிகழ்ந்திருக்கும் ஆக மோசமான விமானப் பேரிடர் அது.
முன்னதாக ஜனவரியில், விபத்து நேர்ந்த இடத்திலிருந்து மீட்கப்பட்ட விமான இயந்திரங்களிலிருந்து ஒன்றில் இறகுகள் காணப்பட்டதாகப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் கூறியிருந்தனர். பறவைகள் இயந்திரத்தைத் தாக்கியதாகக் காணொளிகள் காட்டியதாகவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.
இதன் தொடர்பில், தென்கொரியப் போக்குவரத்து அமைச்சு கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டது.