முவான், தென்கொரியா: முவான் அனைத்துலக விமான நிலையத்தில் ஜேஜூ விமானம் விபத்துக்குள்ளாவதற்கு முன் பறவைகள் குறித்து பலமுறை எச்சரிக்கப்பட்டதாக அண்மைய விசாரணையில் தெரியவந்துள்ளது.
விமான விபத்து நடப்பதற்குப் பத்து நாள்களுக்கு முன்கூட்டியே பறவைகள் பற்றி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விமானம் மீது பறவைகள் மோதுவதைத் தவிர்ப்பது குறித்து முவான் விமான நிலையத்தில் பேசிய அதிகாரிகள், இதற்குமுன் சில விமானங்கள்மீது பறவைகள் மோதிய சம்பவங்களைக் குறிப்பிட்டனர். கடந்த சில ஆண்டுகளில் அத்தகைய சம்பவங்களின் எண்ணிக்கை கூடியதையும் தரவுகள் காட்டுவதாக அவர் குறிப்பிட்டனர்.
இருப்பினும், விமான நிலையத்தில் பறவைகளை விரட்ட போதுமான முயற்சிகள் எடுக்கப்படவில்லை என்று விமான வசதிகளை நிர்வகிக்கும் நிறுவனத்தின் அதிகாரி குறிப்பிட்டார்.
பறவைகளை விரட்ட ஒலிப்பெருக்கிகள் மூலம் எழுப்பப்படும் சத்தமும் விமான நிலையத்துக்கு அப்பால் செல்லக்கூடியதாக இல்லை என்றார் அவர். ஆனாலும் இயன்றதை அதிகாரிகள் செய்துவருவதாக அவர் சொன்னார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 29ஆம் தேதி ஜேஜு விமானம் விபத்துக்குள்ளாவதற்குமுன் ‘மே டே! மே டே!’ என்று விமானி எச்சரிக்கை எழுப்பியதோடு தரையிறங்கிக்கொண்டிருந்தபோது விமானம்மீது பறவை மோதியதாக விமான கட்டுப்பாட்டு நிலையத்திடம் தெரிவித்ததை அதிகாரிகள் உறுதிபடுத்தினர். அதையடுத்து தரையிறங்கிய விமானம் மதில்மீது மோதி விபத்துக்குள்ளானது.
அந்த விபத்துக்கான காரணத்தை அதிகாரிகள் இன்னும் முழுமையாக அடையாளம் காணவில்லை. எனினும், தென்கொரியப் போக்குவரத்து அமைச்சு விமானத்தின் என்ஜினில் பறவைகளின் இறகுகளும் ரத்தமும் இருந்ததைக் கண்டறிந்தனர்.