சோல்: தென்கொரிய அதிபர் பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ள யூன் சுக் யோல், 2024 டிசம்பர் 3ஆம் தேதி ராணுவச் சட்டத்தை அறிவித்திருந்த காலத்தில் தென்கொரிய ராணுவம், இறந்தவர்களின் உடல்களை வைக்கும் பைகளை வழக்கத்தைவிட கூடுதலாக வாங்கியிருந்ததாக உள்ளூர் ஊடகம் ஒன்றிலும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரிடமிருந்தும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால், கூடுதலான மரணங்கள் ஏற்படக்கூடும் என்பதை ராணுவம் எதிர்பார்த்திருந்ததா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
2024 டிசம்பரில் ராணுவத்திடம் உடல்களை வைக்கும் 4,940 பைகள் இருந்ததாக எம்பிசி செய்தி நிறுவனம் செவ்வாய்க்கிழமை (மார்ச் 18) மாலை தெரிவித்தது. இதற்கு, பிரதான எதிர்க்கட்சியான கொரிய ஜனநாயகக் கட்சியிடமிருந்து தரவை அந்நிறுவனம் மேற்கோள்காட்டியது.
2024 நவம்பரில் ராணுவத்திடம் உடல்களை வைக்கும் 1,826 பைகள் இருந்தன. டிசம்பருக்கு முன்னர் ஆண்டு முழுவதும் இந்த எண்ணிக்கை 2,000க்குக் கீழேயே இருந்தது.
ராணுவத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர், உத்தேசமாக 1,000 பிணப்பெட்டிகளை வாங்குவதற்கு, அவற்றைத் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றிடம் 2024 ஆகஸ்ட்டில் விசாரித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பிணப்பெட்டிகளை விநியோகிப்பதற்கு எவ்வளவு நாள் எடுக்கும், 3,000 பேர் இறந்துபோகும் சூழலில் என்ன செய்வது போன்ற கேள்விகளை அந்த அதிகாரி கேட்டிருந்தார். ஆனால், உண்மையில் அந்தப் பிணப்பெட்டிகள் வாங்கப்படவில்லை.
இந்நிலையில், உடல்களை வைக்கும் பைகள் முன்னதாகவே வாங்கப்பட்டதாகவும் அவை டிசம்பரில்தான் விநியோகிக்கப்பட்டதாகவும் ராணுவம் விளக்கமளித்துள்ளது. 2022ல் ராணுவத்தின் ஐந்து ஆண்டுகாலத் திட்டத்துக்கு இணங்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டதாக அது விவரித்தது.
எம்பிசி ஊடகத் தகவலின்படி, தென்கொரிய ராணுவத்தில் ஆண்டுதோறும் வழக்கமாக 100க்கும் குறைவான மரணங்கள் ஏற்படுகின்றன.
தொடர்புடைய செய்திகள்
ராணுவத்தின் விளக்கம் ஒருபுறமிருக்க, கூடுதலாக 3,000 பைகள் கையகப்படுத்தப்பட்டிருப்பது, திட்டமிடப்பட்ட ராணுவ ஆட்சியின்கீழ் திரு யூனும் ராணுவச் சட்டத்துடன் சம்பந்தப்பட்டவர்களும் ஏராளமான மரணங்களுக்குத் திட்டமிட்டதற்கான ஆதாரம் என எதிர்க்கட்சி உறுப்பினர் சூ மீயே தெரிவித்துள்ளார்.