டேய்கு: தென்கொரிய முன்னாள் அதிபர் பார்க் கியூன் ஹையின் வீடு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
உள்நாட்டு யூடியூப் ஒளிவழியொன்றை நடத்துவோரிடம் கடனாக வாங்கிய ஒரு பில்லியன் வொன்னைத் ($869,944) திருப்பிக் கொடுக்கத் தவறியதைத் தொடர்ந்து வியாழக்கிழமை (பிப்ரவரி 5) நீதிமன்றத்தின் உத்தரவு வந்துள்ளது.
ஹோவர்லேப் எனும் யூடியூப் ஒளிவழியும் அதன் தலைவர் கிம் சேயும் வீட்டைப் பறிமுதல் செய்யுமாறு விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
வீட்டை வாங்குவதற்காக 2022ஆம் ஆண்டு திரு கிம்மிடமிருந்து பார்க் 2.5 பில்லியன் வொன்னைக் கடனாக வாங்கியிருந்தார். 20 ஆண்டுச் சிறைத்தண்டனையை அவர் நிறைவேற்றிக்கொண்டிருந்தபோது முன்னாள் அதிபர் மூன் ஜே இன்னின் நிர்வாகம் அவருக்குப் பொது மன்னிப்பு வழங்கியது.
பார்க்கின் பெயரில் முக்கிய எதிர்த்தரப்பான மக்கள் சக்திக் கட்சியில் அவரின் நெடுநாள் சகாவான திரு யூ இயோங் ஹா கடன்தொகையைப் பயன்படுத்தி அந்த வீட்டை வாங்கினார். நான்காண்டுகளாக இருவரும் கடன்தொகையைத் திருப்பிச் செலுத்தவில்லை என்று திரு கிம் அவரின் யூடியூப் ஒளிவழியில் தெரிவித்தார்.
பார்க், திரு கிம்முக்கு 900 மில்லியன் வொன்னும் ஹோவர்லேபுக்கு 100 மில்லியன் வொன்னும் கடன்பட்டுள்ளார்.
2017ஆம் ஆண்டில் அவரை அதிபர் பதவியிலிருந்து நீக்க நாடாளுமன்றம் வாக்களித்தது. அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டுகளின் தொடர்பில் அவருக்கு 22 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
பார்க், டேய்கு நகரில்தான் பிறந்தார். தென்கொரிய அரசியலில் கன்சர்வேட்டிவ் கட்சியின் கோட்டை என அது கருதப்படுகிறது.


