சோல்: தென்கொரியாவில் மருத்துவப் பயிற்சிச் சீர்திருத்தங்களை எதிர்த்து ஒட்டுமொத்தமாக பதவி விலகல் கடிதங்களைச் சமர்ப்பித்த பயிற்சி மருத்துவர்கள் பிப்ரவரி 19ஆம் தேதி வேலைக்குத் திரும்ப வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
தென்கொரியாவில் விரைவில் மூப்படைந்துவரும் சமுதாயத்திற்கு உதவும் நோக்கில், மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க கடுமையான முயற்சி எடுத்துவருவதாக அந்நாட்டு அரசாங்கம் கூறியது.
இருப்பினும், மருத்துவப் பள்ளி மாணவர் சேர்ப்பு ஒதுக்கீட்டு உச்ச வரம்பை அதிகரிக்க அரசாங்கம் வகுத்த புதிய திட்டத்திற்கு மருத்துவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அது சேவைத் தரத்தைப் பாதிக்கும் என்று அவர்கள் கூறுகின்றனர்.
அந்த நடவடிக்கை தங்களின் சம்பளங்களையும் சமூக நிலையையும் பாதிக்கக்கூடும் என்று மருத்துவர்கள் கவலைப்படுவதாக கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
தென்கொரிய அரசாங்கம் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று மிரட்டியபோதும், பிப்ரவரி 19ஆம் தேதி நூற்றுக்கணக்கான பயிற்சி மருத்துவர்கள் தங்கள் பதவி விலகல் கடிதங்களைச் சமர்ப்பித்துள்ளனர். அவர்கள் பிப்ரவரி 20ஆம் தேதியிலிருந்து வேலைக்குச் செல்வதை நிறுத்தத் திட்டமிட்டுள்ளனர்.
தென்கொரிய மருத்துவச் சட்டத்தின்கீழ், பெரிய அளவிலான வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு மருத்துவர்களுக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.