சோல்: தென்கொரிய உள்ளாட்சித் தேர்தலின்போது வாக்குச் சீட்டுத் தட்டுப்பாடு ஏற்பட்டதை அடுத்து, தலைநகர் சோலில் உள்ள வாக்கு எண்ணும் நிலையத்திற்கு அருகே ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக யோன்ஹாப் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை (ஜூன் 5) இரவு, கிட்டத்தட்ட 6,000 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும் மீண்டும் வாக்குப்பதிவு நடத்தக் கோரி அவர்கள் முழக்கமிட்டதாகவும் அது கூறியது.
ஜூன் 3ஆம் தேதி, மேயர், மாநில ஆளுநர், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் வாக்குச்சீட்டுகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டதால் இடையூறு ஏற்பட்டது. அதையடுத்து மீண்டும் வாக்குப்பதிவை நடத்த வேண்டுமென ஆர்ப்பாட்டக்காரர்கள் கோருகின்றனர்.
வாக்குகள் எண்ணப்படும் ‘எஸ்கே ஒலிம்பிக்’ கைப்பந்து விளையாட்டரங்கிற்கு சனிக்கிழமை அதிகாலை வரை ஆர்ப்பாட்டக்காரர்கள் வாகனங்களில் வந்தவண்ணம் இருந்ததைக் காண முடிந்ததாக நேரில் பார்த்த ஒருவர் ராய்ட்டர்சிடம் கூறினார்.
சோல் நகரக் காவல்துறை இதுகுறித்து உடனடியாகக் கருத்துரைக்கவில்லை.
தேர்தல் ஆணையர் பதவி விலகல்
முன்னதாக, சில மாவட்டங்களில் வாக்குச்சீட்டுப் பற்றாக்குறை நிலவியதற்குப் பொறுப்பேற்றுக்கொண்டு தாம் பதவி விலகுவதாக தேசியத் தேர்தல் ஆணையத் தலைவர் ரோ தே-அக் அறிவித்திருந்தார்.
இந்தத் தவற்றுக்கு எந்தச் சாக்குபோக்கும் கூற முடியாது என்றும், இது பொதுமக்களிடையே நம்பிக்கையின்மையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மொத்தமுள்ள 14,300 வாக்குச்சாவடிகளில் 50ல் வாக்குச் சீட்டுகள் தீர்ந்துபோனதாகவும் வாக்குச் சீட்டு விநியோகத் தாமதத்தால் 22 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு தடைபட்டதாகவும் தேசியத் தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
வாக்குப் பதிவு மாலை 6 மணிக்கு அதிகாரபூர்வமாக நிறைவுற்ற நிலையில் சில வாக்குச்சாவடிகளில் இரவு 9 மணி வரை வாக்காளர்கள் காத்திருக்க நேரிட்டதாகக் கூறப்படுகிறது.
பொதுமக்களின் ஜனநாய உரிமைகளைப் பாதுகாக்கத் தவறிவிட்டதாக அரசாங்க அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர்.
மேலும், இந்தச் சம்பவம் குறித்து நடுநிலையான விசாரணை நடத்தப்படும் என்றும் திரு ரோ தே-அக் உறுதியளித்தார்.
தென்கொரிய உள்ளாட்சித் தேர்தல்களில் 63 விழுக்காட்டு வாக்குகள் பதிவானதாகத் தெரிகிறது.

