2 வயது குழந்தையின் உயிரிழப்புக்குப் பெற்றோர் மீது விசாரணை

2 mins read
மதுபானமும் காரம் மிகுந்த சுவையூட்டியும் ஊட்டப்பட்டன
789d1024-3aee-479c-8820-9eb5e9f42e69
உயிரிழந்த குழந்தை தொடர்ந்து அடி, உதை வாங்கியதாகவும் அதனால் பல்வேறு காயங்களுடன் தலையில் எலும்பு முறிவு அதற்கு ஏற்பட்டதாகவும் அரசுத்தரப்பு குற்றம் சாட்டியுள்ளது. - படம்: பெக்சல்ஸ்

சோல்: இரண்டு வயது குழந்தை ஒன்று 2024ஆம் ஆண்டு பிற்பாதியில் உயிரிழந்ததை அடுத்து பெற்றோரால் அக்குழந்தை துன்புறுத்தப்பட்டிருக்கலாம் என்று வழக்கு விசாரணையில் தெரியவந்துள்ளது.

நீதிமன்றத்தில் பிப்ரவரி 6ஆம் தேதி நடந்த விசாரணையில் குழந்தைக்கு அதிக காரமுடைய ‘புல்டாக்’ சுவையூட்டியும் அரிசியில் தயாரிக்கப்படும் ‘சோஜு’ மதுபானமும் ஊட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

மரணம் விளைவித்தல், தொடர் துன்புறுத்தல், கவனக்குறைவு ஆகியவை தொடர்பான குற்றச்சாட்டுகளை உயிரிழந்த குழந்தையின் பெற்றோர் எதிர்நோக்கும் நிலையில், அரசாங்கத் தரப்பினர் நீதிமன்றத்தில் இதனைத் தெரிவித்தனர்.

குழந்தையின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குழந்தையின் தாயார் தடுப்புக் காவலைத் தவிர்த்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைக்கு உணவை ஒரு குழாய் வழியாகச் செலுத்த வேண்டும். இருப்பினும், அவ்வாறு செய்வதைக் குழந்தையின் பெற்றோர் நிறுத்திவிட்டு அதற்குப் பதிலாக குழந்தை உணவை வற்புறுத்திக் கொடுத்து வந்தனர்.

மேலும், உயிரிழந்த குழந்தை தொடர்ந்து அடி, உதை வாங்கியதாகவும் அதனால் பல்வேறு காயங்களுடன் தலையில் எலும்பு முறிவு அதற்கு ஏற்பட்டதாகவும் அரசுத்தரப்பு குற்றம் சாட்டியுள்ளது.

குழந்தை உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதற்கு முன்பாக, டிசம்பர் 15ஆம் தேதி குழந்தையின் பெற்றோர் அதற்கு கடுமையான காரமுடைய ‘புல்டாக்’ சுவையூட்டியைத் தந்ததாக நம்பப்படுகிறது. குழந்தை உடல்நலமில்லாமல் இருந்ததால் மருத்துவ குணமுடையதாக நம்பப்படும் கொரிய மதுபானமான ‘சோஜு’வையும் கட்டாயப்படுத்திக் குழந்தைக்கு ஊட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.

குழந்தை பேச்சுமூச்சின்றி இருப்பதாக மறுநாள் குழந்தையின் பெற்றோர் அவசர மருத்துவச் சேவையை நாடினர். 25 மாதக் குழந்தை வெறும் 6.9 கிலோ எடை கொண்டிருந்ததை மருத்துவப் பணியாளர்கள் கண்டறிந்தனர்.

“தங்களின் துன்புறுத்தல் வெளிச்சத்துக்கு வந்துவிடும் என அஞ்சி குழந்தையின் உயிரிழப்பைப் பெற்றோர் உடனே தெரியப்படுத்தவில்லை. நிலைமை கைமீறிப் போனதால் அதைச் சமாளிக்க முடியாமல் உதவிக்கு அழைத்தனர்,” என்றது அரசுத்தரப்பு.

குழந்தையின் பெற்றோருக்கு மேலும் மூன்று பிள்ளைகள் உள்ளனர். அவர்கள் தற்போது அவர்களின் தாத்தா பாட்டியின் பராமரிப்பில் உள்ளனர். அம்மூன்று பிள்ளைகளிடம் துன்புறுத்தலுக்கான அறிகுறிகள் ஏதும் காணப்படவில்லை என்று விசாரணை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்