சோல்: தென்கொரியத் தலைநகர் சோலில் 2022ஆம் ஆண்டில் நடந்த ‘ஹாலோவீன்’ கூட்ட நெரிசலின் தொடர்பில் புதிய விசாரணையைத் தொடங்குவதற்கான மசோதாவை தென்கொரிய நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.
ஆளும், எதிர்த்தரப்புக் கட்சியினர் அந்த மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, ஆளும் மக்கள் சக்திக் கட்சியின் (பிபிபி) ஆதரவு இல்லாமல், எதிர்த்தரப்பு வழிநடத்திய நாடாளுமன்றம் ஆதரவு தெரிவித்திருந்த மசோதாவை அதிபர் யூன் சுக் யோல் ரத்துசெய்தார்.
ஆக அண்மைய மசோதாவின்கீழ், இரண்டு முக்கியக் கட்சிகள் பரிந்துரைக்கும் உறுப்பினர்கள் அடங்கிய குழுவினரும், அவர்கள் தேர்ந்தெடுக்கும் தலைவரும் அந்த அசம்பாவிதத்தின் தொடர்பில் கலந்தாலோசிப்பர்.
ஏப்ரலில் நடந்த பொதுத் தேர்தலில், பிபிபி கட்சி தோல்வியுற்றதைத் தொடர்ந்து, ஏப்ரல் 29ஆம் தேதி திரு யூன், எதிர்த்தரப்புத் தலைவரான ஜனநாயகக் கட்சியின் லீ ஜே மியுங்கைச் சந்தித்துப் பேசியதை அடுத்து, புதிய மசோதா வந்துள்ளது.
உயிரிழந்தவர்களின் உறவினர்களிடமிருந்து உட்பட, அதிகாரிகள் மீது நெருக்குதல் அதிகரித்துவரும் வேளையில், புதிய மசோதா பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.

