தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புதிய அதிபரைத் தேர்ந்தெடுக்க வாக்களிக்கும் தென்கொரிய மக்கள்

1 mins read
29e498a0-78d1-42f2-83fd-09d8eba6801a
சோல் நகரில் உள்ள வாக்களிப்பு நிலையத்தில் ஜூன் 3ஆம் தேதி வாக்களிக்கும் அந்நாட்டு மக்கள். - படம்: ஏஎஃப்பி

சோல்: தென்கொரிய மக்கள் நாட்டின் புதிய அதிபரைத் தேர்ந்தெடுக்க செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) வாக்களித்துவருகின்றனர்.

அந்நாட்டின் முன்னாள் அதிபர் யூன் சுக் இயோல் ராணுவச் சட்டத்தை அறிவித்ததைத் தொடர்ந்து கடந்த ஆறு மாதங்களாகிய நிலவிய பெருங்குழப்பத்துக்கு முடிவுகட்டும் வகையில் இந்த வாக்களிப்பு அமைகிறது.

தலைநகர் சோலின் முன்ரே-டோங் வட்டாரத்தில் உள்ளூர் நேரப்படி காலை 6 மணிக்கு (சிங்கப்பூர் நேரப்படி அதிகாலை 5 மணி) முதிய வாக்காளர்கள் சிலர் வாக்களிப்பதற்காக வரிசையில் காத்திருந்தனர்.

முன்கூட்டியே வாக்களிக்கும் முறையின்கீழ் ஏற்கெனவே மில்லியன்கணக்கானோர் வாக்களித்துவிட்டதாகத் தென்கொரியாவின் தேசிய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

முக்கியக் கருத்துக் கணிப்புகளில் ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் லீ ஜே மியுங் முன்னணியில் இருக்கிறார். ஆக அண்மைய கருத்துக் கணிப்பில் கலந்துகொண்ட 49 விழுக்காட்டினர் அவரை ஆகச் சிறந்த அதிபர் வேட்பாளர் என்று கருதுவதாகத் தெரிவித்துள்ளனர்.

அவருக்கு அடுத்த நிலையில் மக்கள் சக்திக் கட்சியின் கிம் மூன் சூ (பதவி விலகிய முன்னாள் அதிபர் யூனின் கட்சி) 35 விழுக்காட்டினரின் ஆதரவைப் பெற்றிருந்தார்.

சீர்திருத்தக் கட்சி வேட்பாளர் லீ ஜுன்-சியோக்கைச் சமாதானப்படுத்தி, வலதுசாரி வாக்குகள் பிரிவதைத் தடுக்கும் முயற்சியில் அவர் தோல்வியுற்றது குறிப்பிடத்தக்கது.

தேர்தலில் வெற்றிபெறும் வேட்பாளர், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குத் தென்கொரியாவின் அதிபராகப் பதவி வகிப்பார்.

குறிப்புச் சொற்கள்