சோல்: அமைச்சர்களைப் பரிந்துரை செய்யுமாறு தென்கொரிய மக்களிடம் அந்நாட்டின் புதிய அதிபர் லீ ஜே மியூங் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஜூன் 10ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் ஆகிய பதவிகளுக்கு யார் யாரை நியமிக்கலாம் எனப் பொதுமக்கள் பரிந்துரை செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
தென்கொரியாவின் ஊழியர் நிர்வாக அமைச்சின் அதிகாரபூர்வ இணையப்பக்கம் வாயிலாக பரிந்துரைகளைச் சமர்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அல்லது அதிபர் லீயின் அதிகாரபூர்வ சமூக ஊடகப் பக்கங்களுக்கு அல்லது மின்னஞ்சலுக்குப் பரிந்துரைகளை அனுப்பிவைக்கலாம்.
பரிந்துரை செய்யப்படுபவர் எந்தத் துறையில் நிபுணத்துவம் கொண்டுள்ளார், அவரது தனிப்பட்ட விவரங்கள், பரிந்துரை செய்யப்படுவதற்கான காரணம், பரிந்துரை செய்பவரின் தனிப்பட்ட விவரங்கள் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.
சுயப் பரிந்துரைகளும் ஏற்றுக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
நாட்டின் அரசியலில் பொதுமக்கள் ஈடுபட்டு மாற்றத்தை ஏற்படுத்தும்போதுதான் உண்மையான ஜனநாயகம் தொடங்குகிறது என்று அதிபர் லீ செவ்வாய்க்கிழமையன்று (ஜூன் 10) தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.
14 வயதும் அதற்கும் மேற்பட்ட வயதுடையவர்களும் பரிந்துரைகளை முன்வைக்கலாம்.

