கியரியோங், தென்கொரியா: இழந்த நம்பிக்கையை மீட்டெடுக்க பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்று தென்கொரிய அதிபர் லீ ஜே மியுங் வடகொரியாவைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
வியாழக்கிழமை (அக்டோபர் 1) தென்கொரிய ஆயுதப்படைகள் நினைவு நாளன்று ஓர் ராணுவத் தளத்தில் வழங்கிய உரையில் அதிபர் அவ்வாறு கோரிக்கை வைத்தார்.
புதன்கிழமை கண்ணிவெடிச் சம்பவம் எல்லையில் நடந்து இருநாடுகளும் ஒன்றையொன்று குற்றஞ்சாட்டிக்கொண்ட பிறகு, இந்த அறைகூவலைத் தென்கொரிய அதிபர் விடுத்துள்ளார்.
அந்தச் சம்பவத்தை தென்கொரிய ராணுவமும் அமெரிக்கத் தளபத்தியமும் போர்நிறுத்த விதிமீறல் என்று கூட்டாக அறிவித்தன.
“நீண்ட இடைவெளிக்குப் பிறகு நம்பிக்கையை வளர்த்தெடுக்கும் எங்களது பாதையில் வடகொரியாவும் இணைந்து பேச்சுவார்த்தைகளைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கிறேன். இரண்டு கொரியாக்களுக்கும் இடையே ராணுவப் பதற்றத்தைக் குறைக்க நடைமுறைக்கேற்ற வழிமுறைகளைத் தொடர்ந்து அவரது நிர்வாகம் செயல்படுத்தும்,” எனவும் அவர் கூறினார்.
கடந்த வாரம் நடந்த கண்ணிவெடித் தாக்குதலில் மூன்று தென்கொரிய ராணுவ வீரர்கள் காயமுற்றனர். அந்தச் சம்பவம் இருநாடுகளின் எல்லையில் அமைக்கப்பட்டுள்ள ராணுவமயமாக்கப்படாத மண்டலத்தில் நடந்துள்ளது.
வடகொரியாமீது அமெரிக்கத் தளபத்தியமும் தென்கொரிய ராணுவமும் வைத்த போர்நிறுத்த விதிமீறல் குற்றச்சாட்டை வடகொரியத் தலைவரின் சகோதரி கிம் யோ ஜோங் புதன்கிழமை நிராகரித்தார். விசாரணை முடிவுகளைப் பொய்யான கட்டுக்கதை என்று குறிப்பிட்டு பதில் தாக்குதல் நடத்தப்போவதாகவும் அவர் மிரட்டினார்.
தென்கொரிய அதிபர் லீ, போர்க்கால நடைமுறைகளை அமெரிக்காவின் கட்டுப்பாட்டிலிருந்து முழுமையாக அவரது நாட்டுக்கு மாற்றுவது நெடுநாள் இலக்கு என அவரது உரையில் மறுவுறுதிப்படுத்தினார். தற்சார்பு நிலையிலான தேசியத் தற்காப்புக்கான பலநாள் திட்டம் அது எனவும் அவர் கூறினார்.
விரிவான ராணுவ மறுவடிவமைப்பின் திட்டங்களில் 2030ஆம் ஆண்டுக்குள் அணுவாயுத நீர்மூழ்கிக் கப்பல்களைத் தயாரிப்பதும் தற்காப்புக் கட்டமைப்புகளை மேம்படுத்துவதும் உள்ளடங்கும் என்றார் அவர்.
அவற்றில் செயற்கை நுண்ணறிவை அடிப்படையாகக் கொண்ட தற்காப்புக் கட்டுப்பாட்டு அமைப்புகள், ஏவுகணைகளை இடைமறிக்கும் உயர்ரக ஆற்றல் கொண்ட கதிரியக்கக் (லேசர்) கருவிகள் ஆகியனவும் உற்பத்தி செய்யப்படும் என்றார் அதிபர் லீ.
