சோல்: பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ள தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோலைக் கைது செய்வதற்கான சாத்தியம் பற்றி ஆராயப்பட்டு வருகிறது.
அவரைக் கைது செய்ய பல சாத்தியக்கூறுகள் உள்ளபோதிலும், முட்டுக்கட்டைகளும் பல உள்ளன.
தென்கொரியாவில் முன்னாள் அதிபர்கள் பலர் கைது செய்யப்பட்ட வரலாறு உள்ளது. இருப்பினும், பதவியில் இருக்கும் அதிபர் எவரும் இதுவரை கைது செய்யப்பட்டது இல்லை.
அந்நாட்டின் அரசியலமைப்பு அத்தியாயம் 84 அதிபரைப் பாதுகாக்கிறது.
“நாட்டுக்கு எதிரான வன்முறை அல்லது தேசதுரோகத்தில் ஈடுபட்டால் ஒழிய, அதிபரின் பதவிக்காலத்தில் அவருக்கு எதிராக குற்றவியல் வழக்குத் தொடரமுடியாது,” என்று அந்த அத்தியாயம் வரையறுக்கிறது.
இதற்கு முன்னர், சுன் டூ-ஹுவான், ரோ தே-வூ ஆகிய இரு அதிபர்களுக்கு எதிராக தேசதுரோகக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. ஆயினும், அவர்கள் அதிபர் பதவியில் இருந்து விலகிய பல ஆண்டுகளுக்குப் பின்னர் அந்தக் குற்றச்சாட்டு மீதான விசாரணை நடைபெற்றது.
தற்போது, பதவியில் இருக்கும்போது அரசாங்கத்துக்கு எதிராக வன்முறையைத் தூண்டியதாக திரு யூனுக்கு எதிராகக் குற்றம் சுமத்தப்படுகிறது.
டிசம்பர் 3ஆம் தேதி இரவு ராணுவ ஆட்சியை அறிவித்த திரு யூன், தேசிய தேர்தல் ஆணைய அலுவலகத்துக்கும் தேசிய நாடாளுமன்றத்துக்கும் படைகளை அனுப்பியதாக குற்றச்சாட்டில் கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், திரு யூனுக்கு எதிரான குற்றச்சாட்டில் அதிகாரப் போட்டி நிலவுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
உயர்மட்ட அதிகாரிகளுக்கான லஞ்ச ஊழல் விசாரணை அலுவலகம், காவல்துறை, அரசுத்தரப்பு சட்டத் துறை ஆகிய மூன்று பிரிவுகளும் திரு யூனின் விவகாரத்தைக் கையாள்வதில் தனித் தனிப் போக்கைக் கடைப்பிடிப்பதாகக் கூறப்படுகிறது.
சர்ச்சைக்குரிய ராணுவ ஆட்சியை அறிவித்ததன் தொடர்பிலான சட்டப் பிரச்சினையைக் கையாள்வதில் இந்த மூன்று அமைப்புகளும் நீயா, நானா என்று முரண்பாட்டைக் கடைப்பிடிக்கின்றன.

