தென்கொரிய சுற்றுலாப் பயணி வருகை உச்சத்தை எட்டியது

தென்கொரிய சுற்றுலாப் பயணி வருகை உச்சத்தை எட்டியது

முதல் காலாண்டின் சுற்றுலாப் பயணிகள் வருகை கடந்த ஆண்டைவிட வரலாறு காணாத வகையில் 23 % ஏற்றம் கண்டது
படம்: ஏஎஃப்பி

16 Apr 2026 - 7:47 pm

1 mins read

சோல்: தென்கொரியாவில் சுற்றுலாப் பயணிகளின் வருகை இவ்வாண்டின் முதல் காலாண்டில் 23 விழுக்காடு ஏற்றம் கண்டுள்ளது.

இதனை கலாசார விளையாட்டு, சுற்றுலாத் துறை அமைச்சு வியாழக்கிழமை (ஏப்ரல் 16) தெரிவித்தது.

மார்ச் மாதத்தில் உருவான மத்திய கிழக்கு நாடுகளின் புவிசார் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில் வெளிவந்துள்ள இந்த எண்ணிக்கை இதுவரையில் முதல் காலாண்டில் பதிவு செய்யப்படாத ஒன்றாகும்.

மார்ச் மாதம் மட்டும் 2.06 மில்லியன் வருகையாளர்கள் தென்கொரியா சென்றுள்ளனர். கடந்த ஆண்டு அதே மாதத்தில் 1.61 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் அங்கு சென்றனர். மேலும் பிடிஎஸ் என்ற புகழ்பெற்ற கொரிய இசைக்குழு நடத்திய நிகழ்ச்சியும் பயணிகள் வருகைக்கு காரணமாகக் கருதப்படுகிறது.

‘கேபாப்’ என்றழைக்கப்படும் நவீன தென்கொரிய இசையின் தாக்கம் காரணமாக உலக அளவில் அந்நாடு, சுற்றுலாப் பயணிகள் விரும்பிச் செல்லும் இடமாக உருவெடுத்துள்ளதாக அமைச்சு குறிப்பிட்டது.

சீனப் பயணிகளே அதிகமாக தென்கொரியா சென்றுள்ளனர். அவர்களின் எண்ணிக்கை 1.45 மில்லியனைக் கடந்துள்ளது. அவர்களுக்கு அடுத்தபடியாக ஜப்பானியர்களும் தைவானியர்களும் இரண்டாம் மூன்றாம் நிலையில் உள்ளனர்.

நெடுந்தூரத்தில் இருந்து 690,000 என்ற மொத்த எண்ணிக்கையில் அமெரிக்கர்களும் ஐரோப்பியர்களும் கூட்டாக தென் கொரியாவால் ஈர்க்கப்பட்டு அங்கு வருகை தந்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்