சோல்: வடகொரிய ஆட்சி மீதான தென்கொரியர்களின் நம்பிக்கையின்மை இதுவரை இல்லாத அளவை எட்டியுள்ளதாக வியாழக்கிழமை (அக்டோபர் 1) வெளியிடப்பட்ட கருத்தாய்வு ஒன்று தெரிவிக்கின்றது.
வடகொரியாவின் ராணுவ அச்சுறுத்தல் குறித்த பார்வையும் முன்பில்லாத வகையில் உச்சத்தைத் தொட்டிருப்பதாக அது குறிப்பிட்டது.
சோல் தேசியப் பல்கலைக்கழகத்தின் அமைதி, ஒருங்கிணைப்பு ஆய்வுக் கழகம் 2026ஆம் ஆண்டின் ‘ஒருங்கிணைப்புப் பார்வை’ குறித்துக் கருத்தாய்வை நடத்தியது.
அதில் பங்கெடுத்தோரில் 78.3 விழுக்காட்டினர், வடகொரிய ஆட்சியுடன் சமரசப் பேச்சு நடத்துவது சாத்தியமற்றது என்று தெரிவித்துள்ளனர். 2007ல் இந்தக் கழகம் ஆண்டுதோறும் கருத்தாய்வை நடத்தத் தொடங்கிய பிறகு பதிவான மிக அதிகமான விகிதம் இது.
மேலும், 86.4 விழுக்காட்டினர் வடகொரியாவின் அணுவாயுதங்களால் அச்சுறுத்தலை உணர்வதும் 90.4 விழுக்காட்டினர் அணுவாயுதங்களை அது ஒருபோதும் கைவிடாது என்று நம்புவதும் கருத்தாய்வில் தெரியவந்துள்ளன.
அத்துடன் 83.3 விழுக்காட்டினர் இரு நாடுகளின் ஒருங்கிணைப்பை வடகொரிய ஆட்சி விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளனர்; இதுவும் இதுவரை இல்லாத ஆக அதிகமான விகிதம்.
இதற்கிடையே, கருத்தாய்வில் கலந்துகொண்டோரில் 81.8 விழுக்காட்டினர் இரண்டு கொரியாக்களையும் நடைமுறையில் தனித்தனி நாடுகளாகவே பார்ப்பதாகக் கூறியுள்ளனர். அதே வேளையில் 61.6 விழுக்காட்டினர் அமைதியான முறையில் இரு தரப்பும் வாழ்வதும் அமைதியை ஏற்படுத்துவதுமே வடகொரியா தொடர்பான அரசாங்கத்தின் முதன்மைக் கொள்கை இலக்காக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
இரு கொரிய எல்லைகளில் அண்மை வாரங்களில் ராணுவப் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில் கருத்தாய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.
முக்கிய எதிர்த்தரப்பான ‘மக்கள் சக்தி கட்சியின்’ நாடாளுமன்ற உறுப்பினர் யூ யோங்-வோனுக்குத் தென்கொரியப் பாதுகாப்பு அமைச்சு வழங்கிய தரவுகளின்படி, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் வடகொரியப் படைகள் ராணுவக் கட்டுப்பாட்டுக் கோட்டைக் கிட்டத்தட்ட 50 முறை கடந்துள்ளன. இவை பெரும்பாலும் எல்லையின் கிழக்குப் பகுதியிலேயே நடந்துள்ளன.
இந்த எல்லை மீறல்களுக்குப் பதிலடியாகத் தென்கொரியப் படைகள் எச்சரிக்கை ஒலிபரப்புகளையும் துப்பாக்கிச் சூடுகளையும் நடத்தின.
