தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கம்போடியத் தடுப்புக் காவலிலிருந்து தாய்நாடு திரும்பிய தென்கொரியர்கள்

2 mins read
75015ed1-d21a-4254-9853-cc566059b11c
மோசடிகளில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் கம்போடியத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த தென்கொரியர்கள் தாய்நாட்டுக்கு அனுப்பப்பட்டனர். - படம்: யொன்ஹப்

சோல்: இணையமோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் கம்போடியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 64 தென்கொரியர்கள் தாய்நாடு திரும்பியுள்ளனர்.

போலியான வேலை வாய்ப்பு, வெளிநாட்டினர் பலர் கடத்தப்பட்ட விவகாரத்தில் மோசடி நிலையங்களின் ஈடுபாடு ஆகியவை குறித்து கலந்துரையாட தென்கொரியா கம்போடியாவுக்கு இம்மாதம் 15ஆம் தேதி குழு ஒன்றை அனுப்பியது.

அதையடுத்து மொத்தம் 64 குடிமக்கள் சிறப்பு விமானம் மூலம் இஞ்சியோன் அனைத்துலக விமான நிலையத்தை வந்தடைந்ததாக அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

மோசடி குற்றங்கள் புரிந்ததாகச் சந்தேகிக்கப்படும் கிட்டத்தட்ட 60 தென்கொரியர்களை அதிகாரிகள் கம்போடியாவில் தடுத்து வைத்திருந்ததாகக் கூறிய சோல், அவர்களைத் தாய்நாட்டுக்குக் கொண்டு வர சூளுரைத்தது.

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டவர்களில் சிலர் தாமாக மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் என்றும் வேறுசிலர் கட்டாயப்படுத்தப்பட்டனர் என்றும் தென்கொரியத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் வி சங் லெக் இதற்குமுன் கூறினார்.

மோசடிகளை முடக்க தென்கொரியாவும் கம்போடியாவும் மேற்கொண்ட நல்ல ஒத்துழைப்பு காரணமாக தென்கொரியர்கள் சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்ப ஒப்புக்கொள்ளப்பட்டது என்று கம்போடிய உள்துறை அமைச்சின் பேச்சாளர் டச் சொக்காக் சுட்டினார்.

கம்போடியாவில் உள்ள மோசடி நடவடிக்கைகளில் ஏறக்குறைய 200,000 பேர் வேலை செய்வதாகக் கூறப்படுகிறது. அவர்களில் கிட்டத்தட்ட 1,000 பேர் தென்கொரியர்கள் என்று மதிப்பிடப்படுவதாகச் சோல் குறிப்பிட்டது.

சிலர் வதைப்படுவோம் என்ற அச்சத்தால் அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது.

கம்போடியாவில் அண்மை ஆண்டுகளாக பல பில்லியன் டாலர் சட்டவிரோத மோசடித் துறை துரிதமாகப் பெருகியுள்ளது.

பல்லாயிரக்கணக்கானோர் இணைய மோசடிக் குற்றங்களில் ஈடுபடுகின்றனர். ஒருசிலர் மனமுவந்து அங்கு வேலை செய்கின்றனர். வேறு சிலர் குற்றக் கும்பல்கள் மூலம் கட்டாயப்படுத்தப்படுகின்றனர் என்று வல்லுநர்கள் கூறினர்.

குறிப்புச் சொற்கள்