சோல்: பொய்ச் செய்திகளை எதிர்த்துப் போராடுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு மசோதாவிற்குத் தென் கொரியாவின் அமைச்சரவை செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 30) அன்று ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் இணையத்தில் தவறான தகவல்களால் குறிவைக்கப்பட்டவர்களுக்கு ஏற்பட்ட இழப்புகளைவிட ஐந்து மடங்கு வரை தண்டனை இழப்பீடு கோர முடியும்.
முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலின் ராணுவச் சட்டம் 2024 டிசம்பரில் அமல்படுத்தப்பட்டது தொடர்பான குற்றங்களுக்காக அமைக்கப்பட்ட சிறப்பு நடுவர் மன்றத்தைத் தொடங்குவதற்கும் அமைச்சரவை பச்சைக்கொடி காட்டியது.
பிரகடனத்தைத் தொடர்ந்து, குறைந்தது நான்கு சிறப்பு நடுவர் மன்றங்கள் நிறுவப்படும். இரண்டு சோல் மத்திய மாவட்ட நீதிமன்றத்தின் கீழும், மற்ற இரண்டும் சோல் உயர் நீதிமன்றத்தின் கீழும் இயங்கும்.
கொரியாவின் ஆளும் ஜனநாயகக் கட்சி, எதிர்க்கட்சிகளின் ஒப்புதல் இல்லாமல் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் ஒருதலைப்பட்சமாக மசோதாக்களை நிறைவேற்றியதால், இரண்டு நடவடிக்கைகளும் சர்ச்சைக்குரியதாகக் கருதப்பட்டன. ஜனநாயகக் கட்சி உட்பட மிதவாதக் கட்சிகள், பிரதான எதிர்க்கட்சியான மக்கள் சக்திக் கட்சி இரண்டு மசோதாக்களையும் தீர்மானங்கள் மூலம் தடுக்கும் முயற்சிகளை முறியடிக்க ஒன்றிணைந்தன.
குறிப்பாக, கடந்த ஜூலை மாதம் நடைமுறைக்கு வரவிருந்த பொய்ச் செய்தி மசோதாவும் தகவல் மற்றும் தொடர்புக் கட்டமைப்புச் சட்டத்தில் திருத்த மசோதாவும் அதிபர் லீ ஜே மியுங் கூட்டிய அமைச்சரவைக் கூட்டத்தின்போது அதை தடை செய்ய அழைப்பு விடுத்த போதிலும் அங்கீகரிக்கப்பட்டன.
அரசாங்க அறிக்கையின்படி, நிதி ஆதாயத்திற்காகத் தவறான தகவல்களைப் பரப்பும் ஊடக நிறுவனங்கள் மற்றும் ஒளிவழிகளுக்கு எதிராக தண்டனை இழப்பீடு வழங்க இந்த மசோதா வகை செய்கிறது. இந்த அபராதங்கள் எந்த நிறுவனங்களுக்கு விதிப்பது போன்றவற்றை அதிபர் ஆணையத்தாலும், கொரிய ஊடக, தொடர்பு ஆணையத்தாலும் தீர்மானிக்கப்படும்.
திரு லீ இரண்டு மசோதாக்களையும் தடை செய்யத் தவறினால், அரசியலமைப்பு நீதிமன்றத்தில் புகார்களைத் தாக்கல் செய்வது உட்பட, கிடைக்கக்கூடிய அனைத்து விருப்பங்களையும் கட்சி பரிசீலிக்கும் என்று மக்கள் சக்திக் கட்சியின் தலைவர் பிரதிநிதி சாங் இயோன்-சியோக் டிசம்பர் 30 அன்று கூறினார்.
டிசம்பர் 29 அன்று சோலின், யோங்சான்-குவில் உள்ள ஓர் இடத்திலிருந்து அதிகாரபூர்வமாக இடமாற்றம் செய்யப்பட்டதிலிருந்து சியோங் வா டே அதிபர் வளாகத்தில் நடைபெற்ற முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த மசோதாக்கள் அங்கீகரிக்கப்பட்டன என்று தி கொரியா ஹெரால்ட் செய்தித் தளம் கூறியது.

