சோல்: தென்கொரியாவின் டோங்குக் பல்கலைக்கழகம், வெளிநாட்டு மாணவர்களுக்காகவே புதிய கல்லூரி ஒன்றை 2028ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தொடங்கவுள்ளது.
இதில் ஆறு பாடப்பிரிவுகள் வழங்கப்படும் என்றும் ஒவ்வொரு பாடப்பிரிவிலும் தொடக்கத்தில் ஏறத்தாழ 30 முதல் 50 மாணவர்கள் வரை சேர்க்கப்படுவர் என்றும் அப்பல்கலைக்கழகம் அக்டோபர் 19ஆம் தேதி ‘கொரியா ஹெரால்ட்’ நாளிதழிடம் தெரிவித்தது.
வெளிநாட்டு மாணவர்களிடையே உள்ள கல்வித் தேவைகளுக்கான பகுப்பாய்வின் அடிப்படையில், ‘ஹல்யு’ கலாசாரம், திரைப்படத் தயாரிப்பு, விளம்பரம், ஊடகம், உலகளாவிய வர்த்தகம், நாடகம்-நடிப்பு ஆகிய ஆறு பாடப்பிரிவுகள் தேர்வு செய்யப்பட்டு இந்தக் கல்லூரியில் வழங்கப்படவுள்ளன.
2028ஆம் ஆண்டு மார்ச் கல்விச் சேர்க்கை முதல், இந்தக் கல்லூரியின் சேர்க்கைத் தகுதிகளைப் பூர்த்தி செய்யும் வெளிநாட்டு இளங்கலை விண்ணப்பதாரர்கள் புதிய கல்லூரியின் வாயிலாகச் சேர்த்துக் கொள்ளப்படுவர்.
பெற்றோர் இருவருமே வெளிநாட்டினராக இருக்கும் மாணவர்களுக்கு மட்டுமே விண்ணப்பிக்கும் தகுதி நிர்ணயிக்கப்படும். தற்போது வெளிநாட்டு மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் கல்லூரிகளிலும் துறைகளிலும் நேரடியாகச் சேரும் நடைமுறை நடப்பில் உள்ளது.
