சோல்: தென்கொரிய வங்கிகள் மீதான அண்மைக்கால இணைய ஊடுருவல்களில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளிவந்ததைத் தொடர்ந்து, ஏஐ யுகத்திற்கு ஏற்றவாறு இணையப் பாதுகாப்பு முறைகளை மேம்படுத்துமாறு அந்நாட்டு அதிபர் லீ ஜே மியுங் வலியுறுத்தியுள்ளார்.
“சில ஊடுருவல் சம்பவங்களில் ஏஐ பயன்படுத்தப்பட்டதற்கான அறிகுறிகள் வெளிவந்துள்ளன. இது பொதுமக்களிடையே பெரிய அளவில் கவலையையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது,” என்று அமைச்சரவைக் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 6) பேசிய திரு லீ கூறினார்.
பாதிப்புகளைக் குறைக்கத் தேவையான மனிதவளத்தையும் ஆதாரங்களையும் முழுமையாகப் பயன்படுத்துமாறு அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
சின்கான் வங்கி, கேபி குக்மின் வங்கி, ஹானா வங்கி, ஊரி வங்கி ஆகிய வணிக வங்கிகள் மீது நடத்தப்பட்ட இணைய ஊடுருவல்கள் தொடர்பாகக் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அதன் மூலம் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டுள்ளன.
முன்னதாக, கடந்த ஜூன் மாதம் ஆஸ்திரேலிய அரசின் சுகாதாரத் தரவுத் தளத்திலும், கனடா அரசின் இணையத்தளத்திலும் ஏஐ மூலம் ஊடுருவ முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக அனைத்துலக அளவில் தகவல்கள் வெளிவந்தன.
