தென்கொரிய எதிர்க்கட்சித் தலைவர் தேர்தல் சட்டத்தை மீறியதாகத் தீர்ப்பு

2 mins read
7d7d9932-1e90-45bf-a8fc-bbe2c174f136
எதிர்த்தரப்புத் தலைவர் லீ ஜெ மியூங்கின் கட்சி கடந்த ஏப்ரலில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றிபெற்றது. - படம்: ராய்ட்டர்ஸ்

சோல்: தென்கொரியாவில் தேர்தல் சட்டத்தை மீறியதன் தொடர்பில் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர் லீ ஜெ மியூங் குற்றவாளி எனத் தீர்ப்பளித்து, அந்நாட்டு நீதிமன்றம் அவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது.

அந்தச் சிறைத்தண்டனை இரண்டு ஆண்டுகளுக்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

‘யோன்ஹாப்’ செய்தி நிறுவனம் அந்தத் தகவல்களை வெளியிட்டது.

இந்நிலையில், நீதிமன்ற முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக லீ கூறியுள்ளார்.

எந்தவொரு சிறைத் தண்டனையோ ஒரு மில்லியன் வோனுக்கு மேலான அபராதமோ உறுதியானால், லீ நாடாளுமன்றப் பதவியை இழந்துவிடுவார். அதோடு, அடுத்த ஐந்தாண்டுகளுக்கு அவரால் எந்தவொரு தேர்தலிலும் போட்டியிட முடியாது.

லீ, சோல் மத்திய மாவட்ட நீதிமன்றத்தைச் சென்றடைந்தபோது, ஆதரவாளர்கள் அவரது பெயரை உரக்கக் கத்தி முழக்கமிட்டனர். நீதிமன்றத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டக்காரர்களும் கூடியிருந்தனர்.

முக்கிய எதிர்த்தரப்பு ஜனநாயகக் கட்சியின் தலைவரான லீ, 2022ஆம் ஆண்டு தேர்தலில் அதிபர் யூன் சுக் யோலிடம் சிறிய வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

லஞ்சம், ஊழல் உள்ளிட்ட ஏழு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட பிறகு லீ, குறைந்தது நான்கு வழக்குகளில் விசாரணையை எதிர்நோக்குகிறார்.

கடந்த 2021ஆம் ஆண்டில் அதிபர் வேட்பாளராகக் களமிறங்கிய லீ, பொய்யான தகவலைத் தெரிவித்து தேர்தல் சட்டத்தை மீறியதாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேம்பாட்டுத் திட்டம் ஒன்றுக்குப் பொறுப்பேற்ற நகர அதிகாரிக்கும் தமக்கும் தொடர்பு இல்லை என்று அவர் கூறியிருந்தார்.

லீ மேயராகச் சேவையற்றிய ‘சியோங்னாம்’ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அந்தத் திட்டம் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. லீக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

அதே பகுதியில் நில மேம்பாட்டுத் திட்டம் குறித்து 2021ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தணிக்கையின்போது பொய்யான தகவலைத் தெரிவித்ததாகவும் லீ மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இருந்தாலும், வரும் 2027ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் லீ போட்டியிடுவார் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்