தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தென்கொரியாவின் தற்காலிக அதிபர் மீது குற்றம் சுமத்த எதிர்க்கட்சி முயற்சி

2 mins read
2e30537a-bc50-4599-bc57-22cf95ee51d8
தென்கொரியாவின் தற்காலிக அதிபர் ஹான் டக் சூ. - படம்: ராய்ட்டர்ஸ்

சோல்: தென்கொரியாவின் தற்காலிக அதிபர் ஹான் டக் சூவுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுத்து அவர்மீது குற்றம் சுமத்த முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அந்நாட்டின் எதிர்க்கட்சி டிசம்பர் 26ஆம் தேதியன்று தெரிவித்தது.

தமக்கு முன்பு அதிபராகப் பதவி வகித்த யூன் சுக் யோலை பதவி நீக்கம் செய்யும் நடவடிக்கையை அவர் பூர்த்தி செய்யவில்லை என்று எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி கூறியது.

திரு யூனுக்கு எதிராக அரசமைப்புச் சட்ட நீதிமன்ற நீதிபதிகளை திரு ஹான் நியமிக்க மறுத்துவிட்டதாக அது குறைகூறியது.

டிசம்பர் 3ஆம் தேதியன்று தென்கொரியாவில் ராணுவ ஆட்சியை அப்போதைய அதிபரான திரு யூன் அமல்படுத்தியபோது அந்நாட்டில் அரசியல் நெருக்கடி நிலவியது.

இதன் காரணமாக டிசம்பர் 14ஆம் தேதியன்று திரு யூனை அதிபர் பதவியிலிருந்து தென்கொரிய நாடாளுமன்றம் நீக்கியது.

ஆனால் அவர்மீது குற்றம் சாட்டி அதிபர் பதவியிலிருந்து நீக்கும் பணியை முழுமைப்படுத்த அரசமைப்புச் சட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பு அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அவ்வாறு செய்ய திரு ஹான் மறுத்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

எனவே, திரு யூனை அதிபர் பதவியிலிருந்து நீக்கும் நடவடிக்கை முழுமையடையாமல் உள்ளது.

திரு யூனைத் திரு ஹான் பாதுகாப்பதாகவும் அவருக்குச் சாதகமாக நடந்துகொண்டு கண் துடைப்பு வேலைகளில் ஈடுபடுவதாகவும் ஜனநாயகக் கட்சி கூறுகிறது.

எனவே, திரு ஹானுக்கு எதிராகவும் குற்றம் சுமத்தப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அது வலியுறுத்துகிறது.

இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் டிசம்பர் 27ஆம் தேதியன்று வாக்களிப்பு நடத்தப்படும் என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பார்க் சுங் ஜூன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

எதிர்க்கட்சியின் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டால் தென்கொரியாவில் தற்காலிக அதிபர் மீது குற்றம் சுமத்தப்படுவது இதுவே முதல்முறையாக இருக்கும்.

அவ்வாறு நேர்ந்தால் நிதி அமைச்சர் சோய் சாங் மோக் தற்காலிக அதிபராகப் பொறுப்பேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்