சோல்: தென்கொரியாவின் இடைக்கால அதிபர் ஹான் டக்-சூவுக்கு எதிராக பதவிநீக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
இடைக்கால அதிபராகப் பதவி ஏற்ற இரு வாரங்களில் அவருக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இதற்கு முன் அதிபராக இருந்து யூன் சுன் இயோல் இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார். அவர் விலகியது முதல் ஹான் இடைக்கால அதிபராக இருந்து வருகிறார்.
அரசமைப்பு நீதிமன்றத்தில் காலியாக உள்ள மூன்று நீதிபதிகளின் இடங்களை உடனடியாக நிரப்ப ஹான் மறுத்ததைத் தொடர்ந்து அவருக்கு எதிரான பதவிநீக்கத் தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டு வந்தன.
போதுமான நீதிபதிகள் அரசமைப்பு நீதிமன்றத்தில் இருந்தால்தான் ஏற்கெனவே அதிபர் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட யூனுக்கு எதிராக விரைவான விசாரணை நடத்த இயலும்.
ஆனால், இடைக்கால அதிபரான தமக்கு நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரவரம்பு இல்லை என்று ஹான் காரணம் கூறி புதிய நீதிபதிகளின் நியமனத்தைத் தவிர்த்து வந்தார்.
தீர்மானம் வெற்றிபெற 192 வாக்குகள் தேவை. 300 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளிடம் அதிகமானோர் உள்ளனர். அதனால், தேவையான வாக்குகளுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, நாட்டில் மேலும் குழப்பம் ஏற்படாமல் தவிர்க்க இடைக்கால அதிபர் பொறுப்பில் இருந்து விலக இருப்பதாக ஹான் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டு உள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
“நாடாளுமன்ற முடிவை மதிக்கிறேன். குழப்பத்தையும் நிச்சயமற்ற நிலையையும் தவிர்க்க, சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு எனது பொறுப்புகளில் இருந்து விலகுவேன்,” என்று அந்த அறிக்கையில் ஹான் தெரிவித்து உள்ளார்.
அதேவேளை, தமக்கு எதிரான பதவிநீக்க அல்லது குற்ற விசாரணை தீர்மானம் மீதான அரசமைப்பு நீதிமன்றத்தின் மறுஆய்வு முடிவுக்காகக் காத்திருக்கப் போவதாகவும் அவர் கூறி உள்ளார்.
இந்நிலையில், இம்மாதம் 3ஆம் தேதி திடீரென்று ராணுவ ஆட்சியை அறிவித்து சர்ச்சையில் சிக்கிய முன்னாள் அதிபர் யூன் சுக் இயோல் மீதான விசாரணையைத் தீவிரமாக நடத்த இருப்பதாக அரசமைப்பு நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.

