இறுதிவரை போராடுவேன்: தென்கொரிய அதிபர்

2 mins read
8b4fd4a7-a37a-4a4e-ad16-671f92332a66
தென்கொரிய அதிபர் யூன் சுக் யோல். - கோப்புப் படம்: ஏஎஃப்பி

நெருக்குதலை எதிர்நோக்கிவரும் தென்கொரிய அதிபர் யூன் சுக் யோல், அரசயலில் தமக்குப் போட்டியாக இருப்பவர்கள் தேசத் துரோகிகள் என்றும் தென்கொரியாவின் தேர்தல் விவகாரங்களில் வடகொரியா ஊடுருவியிருக்கக்கூடும் என்றும் சாடியுள்ளார்.

திரு யூன், தென்கொரியாவில் சென்ற வாரம் ராணுவ ஆட்சி சட்டத்தை அமல்படுத்தினார். சில மணிநேரம் மட்டுமே நீடித்த அச்சட்டத்தை அமல்படுத்தத் தாம் எடுத்த முடிவை அவர் வியாழக்கிழமையன்று (டிசம்பர் 12) தற்காத்துப் பேசினார். அச்செயல், ஜனநாயக முறையைப் பாதுகாக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட சட்ட ரீதியான நடவடிக்கை என்று அவர் எடுத்துரைத்தார்.

“நான் கடைசி வரை போராடுவேன்,” என்று திரு யூன் தொலைக்காட்சிவழி ஆற்றிய உரையில் எடுத்துரைத்தார்.

ராணுவ ஆட்சி சட்டத்தை அமல்படுத்தியதன் தொடர்பில் மேற்கொள்ளப்படும் சட்ட, அரசியல் ரீதியான விளைவுகளைத் தாம் சந்திக்கத் தயாராய் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

திரு யூன் பதவி விலகும் அறிகுறிகள் ஏதும் தெரியவில்லை என்றும் அவர் மீது அரசியல் குற்றச்சாட்டு சுமத்தவேண்டும் என்றும் தென்கொரியாவின் ஆளும் கட்சித் தலைவர் ஹான் டோங் ஹூன் கூறியிருந்தார். அத்தகைய சூழலில் திரு யூன் இவ்வாறு சொன்னார்.

அவர் மீது அரசியல் குற்றச்சாட்டு சுமத்த ஆளும் கட்சியான மக்கள் சக்திக் கட்சி (PPP), எதிர்க்கட்சிகளுடன் இணைந்து செயல்படவேண்டும் என்று திரு ஹான் டோங் ஹூன் வியாழக்கிழமையன்று கூறினார். இது, திரு யூன் ஆதரவு இழந்து வருவதைச் சித்திரிப்பதாகக் கருதப்படுகிறது

திரு யூன் மீது அரசியல் குற்றச்சாட்டு சுமத்துவதன் தொடர்பில் வரும் சனிக்கிழமை (டிசம்பர் 14) இரண்டாவது முறையாக நாடாளுமன்ற வாக்கெடுப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சனிக்கிழமை (டிசம்பர் 7) நடைபெற்ற முதல் வாக்கெடுப்பு திரு யூனுக்குச் சாதகமாக அமைந்தது.

இம்மாதம் மூன்றாம் தேதியன்று திரு யூன் தென்கொரியாவில் ராணுவ ஆட்சி சட்டத்தை அமல்படுத்தினார். தென்கொரியாவில் 44 ஆண்டுகளில் ராணுவ ஆட்சி முறை அமல்படுத்தப்பட்டது அதுவே முதன்முறையாகும்.

குறிப்புச் சொற்கள்