சோல்: தென்கொரியாவின் ஆளும் மக்கள் சக்திக் கட்சித் (பிபிபி) தலைவரான ஹான் டோங் ஹூன், அப்பொறுப்பிலிருந்து விலகப்போவதாக திங்கட்கிழமை (டிசம்பர் 16) அறிவித்துள்ளார்.
திரு ஹான், சர்ச்சையில் சிக்கிய முன்னாள் தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோல் மீது அரசியல் குற்றச்சாட்டு சுமத்தவேண்டும் என்று குரல் கொடுத்திருந்தார். அதற்கு அவர் கட்சியில் எதிர்ப்புக் கிளம்பியது.
இருந்தாலும் அவ்வாறு செய்ததற்குத் தாம் வருத்தப்படவில்லை என்று திரு ஹான் குறிப்பிட்டார்.
“ஆளும் கட்சித் தலைவர் பதவியிலிருந்து நான் விலகிக்கொள்கிறேன்,” என்று திரு ஹான் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
“கட்சியின் மேலாண்மைக் குழு கவிழ்ந்ததால் எனது கடமைகளை நிறைவேற்றுவது சாத்தியமன்று. அதிபர் யூன் சுக் இயோல் மீது அரசியல் குற்றச்சாட்டு சுமத்துவது வேதனை தந்தது. அதேவேளை, அந்நடவடிக்கையை எண்ணி நான் வருத்தப்படவில்லை,” என்றார் திரு ஹான்.
கடந்த ஜூலை மாதம் 23ஆம் தேதியன்று திரு ஹான், மக்கள் சக்திக் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்குக் கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் கழித்து அவர் அப்பொறுப்பிலிருந்து விலகுகிறார்.
மக்கள் சக்திக் கட்சியில் திரு யூனுக்கு ஆதராக இருப்பவர்கள் திரு ஹான் பதவி விலகவேண்டும் என்று குரல் கொடுத்து வந்தனர். இருந்தாலும் தாம் தொடர்ந்து அப்பொறுப்பை வகிக்கப்போவதாக திரு ஹான் முன்னதாகக் கூறியிருந்தார்.
இந்நிலையில், திரு யூன் மீது அரசியல் குற்றச்சாட்டு சுமத்துவதன் தொடர்பில் தென்கொரிய அரசியலமைப்பு நீதிமன்றம் பரிசீலனை செய்யத் தொடங்கிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பரிசீலனையைத் தொடர்ந்து அவரைப் பதவி விலகச் செய்ய வைக்கவேண்டுமா என்பது குறித்து முடிவெடுக்கப்படும்.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே, திரு யூன் ராணுவ ஆட்சி சட்டத்தை அமல்படுத்தி சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து அந்நாட்டின் ராணுவம் சிக்கல்களை எதிர்நோக்கி வருகிறது.
திரு யூன் மீது விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. அந்நாட்டு ராணுவத்தின் முக்கியப் படைகளைச் சேர்ந்த தளபதிகள் பலரும் அந்த விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
அதன் காரணமாக தென்கொரிய ராணுவத்தின் தலைமைத்துவப் பொறுப்புகளில் வெற்றிடங்கள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, வடகொரியப் படைகளைக் கண்காணிக்கும் தென்கொரியப் படைகளுக்கு இந்த விவகாரத்தால் நேரடி பாதிப்பு இல்லை என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

