மெர்டேக்கா விடுமுறையால் தெற்கு தாய்லாந்துக்கு 36 மில்லியன் ரிங்கிட் வருமானம்

மெர்டேக்கா விடுமுறையால் தெற்கு தாய்லாந்துக்கு 36 மில்லியன் ரிங்கிட் வருமானம்

2 mins read
28eeab21-01ab-4105-85a1-e4e32beeb68a
ஹாட் யாய், பத்தாலுங், சத்துன், பெத்தோங், பேங்காக், கிராபி ஆகியவை முக்கிய இடங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. - படம்: த ஸ்டார்
Google News Preferred Icon

கோத்தா பாரு: சுதந்திர தினம், பள்ளி விடுமுறை என ஐந்து நாள்களில், சுமார் 60,000 மலேசியர்கள் தெற்கு தாய்லாந்தில் ஏறத்தாழ 36 மில்லியன் ரிங்கிட் செலவு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 2ஆம் தேதி வரை தாய்லாந்துக்குள் நுழையும் பயணிகளை இந்த மதிப்பீடு உள்ளடக்கியுள்ளது என்று தாய்லாந்து-ஆசியான் ஹலால் வர்த்தக, பயணத்துறைச் சங்கத்தின் தலைவர் ஐடா ஓஜே கூறியதாக நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

தங்குமிடம், உணவு, பொருள் வாங்குதல், ஓய்வு நேரச் செயல்பாடுகளுக்காக ஒரு சுற்றுப் பயணி சராசரியாக 600 ரிங்கிட் செலவிடுவதை அடிப்படையாகக் கொண்டு இந்த திட்டமிடப்பட்ட செலவினம் கணக்கிடப்பட்டுள்ளது.

“ஹாட் யாய், பத்தாலுங், சத்துன், பெத்தோங், பேங்காக், கிராபி ஆகியவை முக்கிய இடங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

“விடுமுறை காலத்தில் மலேசிய சுற்றுப் பயணிகளிடமிருந்து வலுவான தேவை இருப்பதைக் காட்டும் வகையில், பிரபலமான சுற்றுலாத் தலங்களில் உள்ள ஹோட்டல்கள் சுமார் 95 விழுக்காடு முன்பதிவு செய்யப்பட்டுள்ளன,” என்று திரு ஐடா கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

டானோக், பாடாங் பெசார், வாங் கெலியான், பெத்தோங் ஆகியவை மிகவும் பரபரப்பான நுழை வாயில்களில் அடங்கும் என்றும் இந்த வருகை ஹோட்டல்கள், உணவகங்கள், சில்லறை விற்பனையாளர்கள், சுற்றுலா நடத்துபவர்களுக்குப் பயனளித்துள்ளது என்றும் ஐடா கூறினார்.

“பரபரப்பான ஹாட் யாயில் பொருள் வாங்குவதிலிருந்து, கடற்கரை உல்லாசப் பயணங்கள், உணவுத் தேடல்கள் வரை, பழக்கமான சூழல், மாறுபட்ட கலாசார அனுபவம் ஆகிய இரண்டின் கலவையை வழங்கும் ஒரு விரைவான பயணத்தை விரும்பும் மலேசியர்களுக்கு தாய்லாந்து ஒரு கவர்ச்சிகரமான இடமாகத் தொடர்கிறது,” என்று அவர் கூறினார்.

விடுமுறைக் காலத்தில் தாய்லாந்திற்கான மலேசியப் பயணத்தை, அண்மைய புறக்கணிப்பு அழைப்பு குறிப்பிடத்தக்க அளவில் பாதிக்கவில்லை என்பதையே இந்த வருகைப்பதிவு சுட்டிக்காட்டுகிறது என்று ஐடா மேலும் கூறினார்.

தாய்லாந்து அதிகாரிகள் தங்களை ‘அச்சுறுத்தியதாக’ ஒரு காணொளி பரவலாகப் பகிரப்பட்டதை தொடர்ந்து, ஆகஸ்ட் 17ஆம் தேதி ஹட் யாயில் போக்குவரத்து விதிமீறல்களுக்காக 17 மலேசிய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்கு மொத்தம் 15,000 பாட், அதாவது சுமார் 1,850 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவத்தையடுத்து இந்த அழைப்பு விடுக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
தாய்லாந்துதலைவர்கடற்கரை