பெக்கான்: விண்ணிலிருந்து கடலில் விழுந்த விண்கலப் பாகம் என்று சந்தேகிக்கப்படும் ஒரு பெரிய பொருள், பாகாங் மாநிலத்தின் பெக்கான் நகர கடற்கரையில் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 30) மாலை ஐந்து மணியளவில் கரை ஒதுங்கியது.
பெக்கானின் தஞ்சோங் நெனாசி பகுதியில் உள்ளூர்வாசிகள் அதனைக் கண்டதாக அங்குள்ள காவல்துறை உயர் அதிகாரி சையிடி மாட் சின் தெரிவித்தார். பிறகு அந்த நிகழ்வு அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்க அமைச்சின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
விண்கலத்திலிருந்து சிதறிய அதன் பாகம் வானிலிருந்து கடலில் விழுந்து அலைகள் அதனை நெனாசி கடற்பகுதிக்கு அடித்து வந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணைகள் குறிப்பிடுவதாக வியாழக்கிழமை (ஜனவரி 1) அவர் ஓர் அறிக்கைவழி தெரிவித்துள்ளார்.
அப்பாகம் 4.26 மீட்டர் நீளம், 3.64 மீட்டர் அகலம் என்ற அளவில் இருப்பதாகவும் மலேசிய அணுசக்தித் துறையினர் அதனை புதன்கிழமை (டிசம்பர் 31) சோதனையிட்டு கதிரியக்கம் எதுவும் உணரப்படவில்லை என்று உறுதியளித்துள்ளதாகவும் திரு சையிடி கூறினார்.
பாதுகாப்பு கருதியும் சம்பந்தப்பட்ட அமைச்சுகள் மேலும் சோதனையிடவும் அந்தப் பாகம் நெனாசி காவல்நிலையத்தில் தற்காலிகமாக வைக்கப்பட்டுள்ளது.
பலநூறு கிலோகிராம் எடைகொண்ட அதன் வெளிப்பகுதி கடல்பாசி போன்ற உயிரினங்கள் சூழ்ந்து, பாதிப்படைந்த நிலையில் உள்ளது.

