விண்வெளியுடன் பங்குச் சந்தையையும் குறிவைக்கும் ‘ஸ்பேஸ்எக்ஸ்’ நிறுவனம்

விண்வெளியுடன் பங்குச் சந்தையையும் குறிவைக்கும் ‘ஸ்பேஸ்எக்ஸ்’ நிறுவனம்

1 mins read
ஸ்பேஸ்எக்ஸ் பங்குகளின் மொத்த மதிப்பு உலகில் முதலிடத்தைப் பிடிக்கும்
9c132e76-414c-4f44-8665-cd10fd6a0430
பெருஞ்செல்வந்தர் இலான் மஸ்க் நிர்வகிக்கும் ஸ்பேஸ்எக்ஸ் எனப்படும் விண்வெளி நிறுவனத்தின் தலைமையகம் கலிபோர்னியாவில் அமைந்துள்ளது. - படம்: ஏஎஃப்பி

நியூயார்க்: செவ்வாய்க் கிரகம் உட்பட, விண்வெளிக்கு மனிதர்களை அழைத்துச் செல்லும் திட்டத்துடன் 2002ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘ஸ்பேஸ்எக்ஸ்’ நிறுவனம், உலகப் பங்குச் சந்தை வரலாற்றில் சாதனை படைக்க விழைகிறது.

பெருஞ்செல்வந்தர் இலான் மஸ்கின் தலைமையில், அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசாவின் முக்கிய ஒப்பந்தங்களை உள்ளடக்கிச் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தில் ‘ஸ்பேஸ்எக்ஸ்’ முன்னணி வகிக்கிறது.

பங்குச் சந்தையிலும் போட்டியிட விருப்பம் தெரிவித்த அந்நிறுவனம், புதன்கிழமை (ஜூன் 3) அதன் விண்ணப்பத்தில் S$96 பில்லியன் (US$75 பில்லியன்) மதிப்புள்ள முதல்கட்டப் பங்குகளைப் பொதுவில் வெளியிடவிருப்பதாக (ஐபிஓ) அறிவித்துள்ளது.

அதன்படி அந்நிறுவனத்தின் மொத்த பங்குச் சந்தை மதிப்பு S$2.27 டிரில்லியனை (US$1.77 டிரில்லியன்) எட்டும் என்று கணிக்கப்பட்டது.

ஒரு பங்கு S$173.25 (US$135) என்று நிர்ணயிக்கப்பட்ட விலையில் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், மொத்தம் 555 மில்லியன் பங்குகளை பொதுவில் விற்பனைக்கு விடவிருப்பதாக அமெரிக்கப் பங்குப்பரிவர்த்தனை ஆணையம் விவரங்களை வெளியிட்டது.

ஜூன் 12 முதல் அது இடம்பெறலாம் எனவும் ஆணையம் குறிப்பிட்டது.

சவூதி நிறுவனத்தை மிஞ்சும் ஸ்பேஸ்எக்ஸ்

சவூதி அரேபியாவின் தேசிய எண்ணெய் நிறுவனமான சவூதி அரம்கோ 2019ஆம் ஆண்டில் திரட்டிய முதல்கட்ட மொத்த பங்குகளின் மதிப்பு S$32.86 பில்லியன் (US$25.6 பில்லியன்) என்ற நிலையில் உலக அளவில் முதலிடத்தில் இதுவரையில் இருந்தது.

எனவே, ஸ்பேஸ்எக்ஸ் வெளியிடவுள்ள பங்குகளின் மொத்த மதிப்பு சவூதி நிறுவனத்தின் சாதனையைத் தகர்த்து உச்சத்தை எட்டிப் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்