மின்சாரத் தடையால் இருளில் மூழ்கிய ஸ்பெயின், போர்ச்சுகல்

2 mins read
f2e0f3e9-b379-43f1-8a22-5bda3bf606c0
மின்சாரத் தடையால் பயணிகள் பலர் ஸ்பெயின் ரயில் நிலையங்களில் உறங்கினர். - படம்: ஏஎஃப்பி

மட்ரிட்: ஸ்பெயின், போர்ச்சுகல் ஆகிய நாடுகளில் நீடித்த மின்தடை படிப்படியாகச் சீராகி வருகிறது.

திங்கட்கிழமை (ஏப்ரல் 28) திடீரென மின்விநியோகம் தடைபட்டதால் ரயில்களில் பயணிகள் சிக்கிக்கொண்டதோடு, நூற்றுக்கணக்கான மின்தூக்கிகளும் வேலை செய்யாமல் முடங்கின

மில்லியன்கணக்கான மக்களின் திறன்பேசிகள் போதுமான மின்சாரம் இன்றி செயலிழந்தன; இணையச் சேவையும் துண்டிக்கப்பட்டது.

ஸ்பெயினில் 90 விழுக்காட்டுக்கும் அதிகமான இடங்களில் மின்சாரச் சேவை வழக்கத்துக்குத் திரும்பியது. ஸ்பெயின் தலைநகர் மட்ரிட், போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பன் ஆகியவற்றிலும் விளக்குகள் எரியத் தொடங்கின என்று ரீ மின்சார உற்பத்தி நிலையம் சொன்னது.

இருள் சூழ்ந்த சாலை.
இருள் சூழ்ந்த சாலை. - படம்: இபிஏ

போர்ச்சுகல் பிரதமர் லூயி மொன்டினெக்ரோ ஒட்டுமொத்த மின்சாரமும் துண்டிக்கப்பட்டதற்கு மூலக் காரணம் ஸ்பெயினில் இருக்கலாம் என்றார். ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சன்செஸ், “மின்சாரத் தடைக்கான அனைத்து காரணங்களும் ஆராயப்படுகிறது. பொதுமக்கள் பொய்த் தகவல்களின் அடிப்படையில் வதந்திகளைப் பரப்பவேண்டாம்,” என்று கேட்டுக்கொண்டார்.

மின்சாரத் தடை ஏற்பட்ட சமயத்தில் கிட்டத்தட்ட 15 கிகாவாட் மின்சாரம் ஐந்து விநாடிகளில் மாயமானதாகத் திரு சன்செஸ் குறிப்பிட்டார்.

ஒட்டுமொத்த மின்சார விநியோகம் எப்போது முழுமையாகச் சீராகும் என்று இப்போதைக்குச் சொல்ல முடியாது என்ற அவர், சில ஊழியர்கள் வீட்டிலிருக்கவேண்டிவரலாம் என்று எச்சரித்தார்.

போர்ச்சுகலில் மின்சார விநியோகம் சில மணி நேரங்களில் முழுமையாக வந்துவிடும் என்று திரு மொன்டினெக்ரோ கூறினார்.

இருளில் பாதசாரிகள்.
இருளில் பாதசாரிகள். - படம்: ஏஎஃப்பி

6.5 மில்லியன் குடும்பங்கள் உள்ள போர்ச்சுகளில் 6.2 மில்லியன் குடும்பங்களுக்கு மட்டும் இரவில் மின்சார விநியோகம் சீர்படுத்தப்பட்டது.

ஸ்பெயினில் இதுபோல இதற்குமுன் நடந்ததில்லை என்ற மக்கள் திடீரென தொலைப்பேசி மூலம் யாருக்கும் அழைப்புவிடமுடியாமல் தவித்ததைக் குறிப்பிட்டனர்.

மட்ரிட் உள்பட ஸ்பெயின், போர்ச்சுகல் நகரங்களில் பதற்றத்துடன் இருந்த வாடிக்கையாளர்கள் வங்கியிலிருந்து பணத்தை எடுக்க விரைந்தனர்.

சாலை மின்விளக்குகளும் செயலிழந்ததால் காவல்துறை அதிகாரிகள் போக்குவரத்து நிலவரத்தைக் கட்டுப்படுத்தத் திணறினர்.

மட்ரிடில் மட்டும் மின்தூக்கிகளில் சிக்கியிருந்தோரை மீட்க 286 மீட்பு நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டனர்.

இருண்ட சாலைகளில் வாகன விளக்கொளி.
இருண்ட சாலைகளில் வாகன விளக்கொளி. - படம்: ஏஎஃப்பி
குறிப்புச் சொற்கள்