ஸ்பெயின், பெல்ஜியம் காலிறுதிக்குத் தகுதி

ஸ்பெயின், பெல்ஜியம் காலிறுதிக்குத் தகுதி

2 mins read
ரொனால்டோ விடைபெறலாம் என எதிர்பார்ப்பு
4b3679ca-6d65-49e4-990d-960514fc708a
ஸ்பெயினின் வெற்றி கோலைப் புகுத்தும் மிக்கெல் மெரினோ. - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 2

டாலஸ்: அமெரிக்காவின் டாலஸ் நகரில் செவ்வாய்க்கிழமை (ஜுலை 7) நடந்த உலகக் கிண்ணக் காற்பந்து மூன்றாம் சுற்று ஆட்டம் ஒன்றில் ஸ்பெயின் 1-0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகலை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

அந்த ஆட்டத்தில் போர்ச்சுகல் அணித்தலைவரும் நட்சத்திர வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனை படைப்பார் எனப் பலரும் எதிர்பார்த்த நிலையில், அது கனவாகவே போனது. நெடுநேரமாக கோலின்றிச் சமநிலையில் இருந்த ஆட்டத்தில், ஸ்பெயின் அணி கடைசி நிமிடத்தில் புகுத்திய கோல், போர்ச்சுகலை கவலையில் ஆழ்த்தி, தொடரிலிருந்து விடைபெறச் செய்தது.

செவ்வாய்க்கிழமை காலை சியாட்டல் நகரில் நடந்த மற்றோர் ஆட்டத்தில் பெல்ஜியம் அமெரிக்காவை 4-1 என்ற கோல் கணக்கில் வென்று காலிறுதிக்குள் நுழைந்தது.

முற்பாதி ஆட்டம் 2-1 என பெல்ஜியத்திற்குச் சாதகமாக முடிந்த நிலையில், பிற்பாதியிலும் அது இரு கோல்களைப் போட்டு, அமெரிக்காவைத் திக்குமுக்காடச் செய்தது. இதனையடுத்து, உலகக் கிண்ணப் போட்டிகளை ஏற்று நடத்தும் அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய மூன்று நாடுகளின் அணிகளும் தொடரிலிருந்து வெளியேறி, தத்தம் நாட்டு ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்தன.

இதனையடுத்து, காலிறுதிச் சுற்றில் ஸ்பெயினும் பெல்ஜியமும் நேருக்கு நேர் பலம் காட்டவிருக்கின்றன.

காலிறுதிக்கு முந்திய சுற்றில் அர்ஜென்டினா - எகிப்து, கொலம்பியா - சுவிட்சர்லாந்து ஆகிய ஆட்டங்கள் மட்டுமே எஞ்சி உள்ளன. அவை புதன்கிழமை (ஜூலை 8) நடைபெறும்.

காலிறுதிச் சுற்று ஆட்டங்கள் ஜூலை 10ஆம் முதல் 12ஆம் தேதிவரை நடைபெறும். வார இறுதியான வெள்ளி (பிரான்ஸ் - மொராக்கோ), சனி (ஸ்பெயின் - பெல்ஜியம்), ஞாயிற்றுக்கிழமைகளில் (நார்வே - இங்கிலாந்து) ஆட்டங்கள் நடைபெறும்.

குறிப்புச் சொற்கள்
காற்பந்துஉலகக் கிண்ணம்போட்டிவெற்றிஸ்பெயின்பெல்ஜியம்போர்ச்சுகல்