பிரெஞ்சு இதயங்களை நொறுக்கிய ஸ்பெயின்

உலகக் கிண்ணக் காற்பந்துத் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது

பிரெஞ்சு இதயங்களை நொறுக்கிய ஸ்பெயின்

2 mins read
d74ab8cd-2b29-4b27-b7ac-1af9b47826c9
ஸ்பெயின் அணியின் இரண்டாம் கோலைப் போட்ட பெட்ரோ போரோ. - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 2

டெக்சஸ்: உலகக் கிண்ணக் காற்பந்துத் தொடரின் அரையிறுதியில் ஸ்பெயின் அணி 2-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியைத் தோற்கடித்து, இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

உலகக் கிண்ணப் போட்டிகளில் மிகச் சிறப்பாக விளையாடிவரும் இரு பெரும் அணிகளான பிரான்சும் ஸ்பெயினும் அரையிறுதி ஆட்டத்தில் புதன்கிழமை (ஜூலை 15) அதிகாலை சந்தித்தன.

இரு குழுக்களிலும் திறமையான ஆட்டக்காரர்கள் இடம்பெற்றிருந்ததால் அதுவே ஓர் இறுதி ஆட்டத்தைப் போன்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.

இருப்பினும், விவேகமும் அனுபவமும் நிறைந்த பிரான்ஸ் குழுவினரால், இளம் ஸ்பானிய ஆட்டக்காரர்களின் விறுவிறுப்பான, அதிரடியான, மின்னல் வேகம் நிறைந்த ஆட்டத்தைச் சமாளிக்க முடியவில்லை.

ஆட்டத்தின் 22வது நிமிடத்தில் பந்துடன் மிக வேகமாக கோல்நோக்கிச் சென்ற ஸ்பெயினின் நட்சத்திரம் லமின் யமாலை பிரெஞ்சுத் தற்காப்பு ஆட்டக்காரர் லூக்கா டின்யா தவறாகத் தடுத்து நிறுத்தினார்.

தயக்கமின்றி நடுவர் ஸ்பெயினுக்கு அளித்த பெனால்டி வாய்ப்பை மிக்கெல் ஒயர்சாபல் வெற்றிகரமாக உதைத்து முதல் கோலை புகுத்தினார். அதிலிருந்து ஆட்டத்தில் ஸ்பெயின் அணியின் கையே ஓங்கியிருந்தது.

கிலியான் எம்பாப்பே, உஸ்மான் டெம்பெலே போன்ற பிரான்ஸ் குழுவின் முன்னணி ஆட்டக்காரர்கள் எவ்வளவோ முயன்றும் ஸ்பெயினின் வலிமையான தற்காப்பு அரணைத் தகர்க்க முடியவில்லை.

ஆட்டத்தின் பிற்பாதியில், 58ஆம் நிமிடத்தில் ஸ்பெயினின் பெட்ரோ போரா, மிகத் திறமையாக தமது அணியின் இரண்டாம் கோலைப் போட்டு பிரான்ஸ் இதயங்களை நொறுக்கினார்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

இறுதியில் ஆட்டம் 2-0 என்று முடிந்தது. பிரான்ஸ் அணியின் உலகக் கிண்ணக் கனவு கலைந்தது. ஸ்பெயின் திங்கட்கிழமை (ஜூலை 20) இடம்பெறவுள்ள இறுதி ஆட்டத்தை நோக்கி வெற்றி நடைபோடுகிறது.

இரண்டாவது அரையிறுதி ஆட்டம் வியாழக்கிழமை (ஜூலை 16) அதிகாலை நடக்கவிருக்கிறது. அதில் வென்று தொடர்ந்து இரண்டாவது முறையாக இறுதிக்கு முன்னேறும் வேட்கையிலுள்ள அர்ஜென்டினாவிற்கு இங்கிலாந்து முட்டுக்கட்டையிடும் முனைப்புடன் இருக்கிறது.

குறிப்புச் சொற்கள்
உலகக் கிண்ணம்காற்பந்துபிரான்ஸ்ஸ்பெயின்விளையாட்டுபோட்டிஅரையிறுதி