தொடக்கக் கல்லூரி மாணவர்களுக்குச் சிறப்புத்தொகை: அன்வார்

தொடக்கக் கல்லூரி மாணவர்களுக்குச் சிறப்புத்தொகை: அன்வார்

2 mins read
a2e66a58-65ce-4b90-8b34-4dd0b1bbf4fe
மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் கல்வியே நாட்டின் அடித்தளம் என்று வலியுறுத்தியுள்ளார். - படம்: மலாய்மெயில்
Google News Preferred Icon

செபாராங்: மலேசியாவில் தாக்கல் செய்யப்படும் 2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் தொடக்கக் கல்லூரி மாணவர்களுக்கான சிறப்புத்தொகை வழங்கப்படும் என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார்.

அக்டோபர் மாதம் அது நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும்.

உயர்நிலைப் பள்ளியில் முதலாம் ஆண்டிலிருந்து ஐந்தாம் ஆண்டுவரை பயிலும் மாணவர்களுக்குச் சிறப்புத்தொகைகள் வழங்கப்படுகின்றன என்ற பிரதமர் அன்வார், பல்கலைக்கழக அளவிலும் சிறப்புத்தொகைகள் வழங்கப்படுவதாகக் குறிப்பிட்டார்.

“ஆனால், தொடக்கக் கல்லூரியிலும் பல்கலைக்கழகத்துக்கும் முந்தைய நிலையில் பயிலும் மாணவர்களுக்கு அவை வழங்கப்படுவதில்லை,” என்று ஐபிஜி துவாங்கு பாய்னுன் வளாகத்தில் திரு அன்வார் தெரிவித்தார்.

எனவே, அக்டோபரில் தாக்கல் செய்யப்படும் வரவுசெலவுத் திட்டத்தில் தொடக்கக் கல்லூரி மாணவர்களுக்கான சிறப்புத்தொகையைச் சேர்த்துக்கொள்ளப்போவதாக அவர் சுட்டினார்.

இருப்பினும், சிறப்புத்தொகையாக எவ்வளவு வழங்கப்படும், யார் அதற்குத் தகுதிபெறுவர், எப்போது அது அமல்படுத்தப்படும் போன்ற விவரங்களை அவர் வெளியிடவில்லை.

“எந்தத் தொகையை வழங்கவேண்டும் என்பதற்கு ஒப்புதல் அளிக்கும்முன் நமது நிதி நிலைமையைச் சரிபார்க்கவேண்டும்” என்று திரு அன்வார் விளக்கம் அளித்தார்.

மடானி அரசாங்கத்தின் வரவுசெலவுத் திட்டங்களில் கல்வித் துறைக்கே ஆகப் பெரிய அளவிலான நிதி ஒதுக்கப்படுகிறது என்ற அவர், நாட்டின் எதிர்காலத்துக்கு அதுவே அச்சாணி என்றார்.

இருப்பினும், கூடுதலான நிதி ஒதுக்கப்பட்டாலும் அதற்கான வளப் பற்றாக்குறை நிலவுவதைத் திரு அன்வார் ஒப்புக்கொண்டார். தரமான கல்வி கிடைப்பது தொடரவேண்டும் என்ற திரு அன்வார், அனைத்துப் பின்னணியைச் சேர்ந்த மாணவர்களுக்கும் அது விரிவுபடுத்தப்படவேண்டும் என்று வலியுறுத்தினார்.

பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்த பிள்ளைகள், கல்வியாளர்களாகவும் அரசாங்க ஊழியர்களாகவும் நிபுணர்களாகவும் செயற்கை நுண்ணறிவு, பகுதி மின்கடத்தி துறை போன்ற துறைகளில் வல்லுநர்களாகவும் மாறுவதற்கான வாய்ப்புகளைப் பெறுவதில்தான் நாட்டின் வெற்றி இருக்கிறது என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்
தொடக்கக் கல்லூரிமாணவர்கள்அன்வார் இப்ராகிம்மலேசியாகல்வி