மஇகா முன்னாள் தலைவர் மாணிக்கவாசகம் நூற்றாண்டு விழா: சிறப்பு அஞ்சல்தலை வெளியீடு

மஇகா முன்னாள் தலைவர் மாணிக்கவாசகம் நூற்றாண்டு விழா: சிறப்பு அஞ்சல்தலை வெளியீடு

சொக்சோ, மாஸ் விமானச் சேவைக்கு வித்திட்ட முன்னாள் மலேசிய அமைச்சர்
படம்: த ஸ்டார்

27 Sep 2026 - 3:56 pm

2 mins read

கோலாலம்பூர்: மலேசிய இந்திய காங்கிரசின் (மஇகா) முன்னாள் தலைவரும் மலேசியாவின் முன்னாள் அமைச்சருமான மறைந்த வி.மாணிக்கவாசகத்தின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது சேவையைப் போற்றும் வகையில் சிறப்பு நினைவு அஞ்சல்தலை ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 27) அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

அமரர் வி.மாணிக்கவாசகம், அடித்தள அரசியல் தொண்டராக இருந்து அமைச்சராகவும் மஇகாவின் 6வது தேசியத் தலைவராகவும் உயர்ந்தவர்.

நாட்டின் வளர்ச்சிக்கும் இந்தியச் சமூகத்தின் உயர்வுக்கும் பெரும் பங்காற்றிய அவர், 1979ஆம் ஆண்டு, 53 வயதில் இயற்கை எய்தும் வரையில் மஇகாவின் தலைவராக இருந்தார்.

“ஊழியர் நலனைப் பாதுகாக்கும் ‘சொக்சோ’ (SOCSO) அமைப்பை உருவாக்குவதற்கான சமூகப் பாதுகாப்புத் திட்டத்தை முதன்முதலில் முன்மொழிந்தவர் மாணிக்கவாசகம்,” என்று குறிப்பிட்டார் அஞ்சல்தலை வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய மஇகா தேசியத் தலைவர் எஸ்.ஏ. விக்னேஸ்வரன்.

சொக்சோவின் மறுவாழ்வு மையங்களில் ஒன்றிற்கு அவரது பெயர் சூட்டப்பட வேண்டும் என அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்ள இருப்பதாக அவர் தெரிவித்தார்.

மலேசிய தேசிய விமானச் சேவையைத் (MAS) தொடங்குவதிலும், இந்திய மாணவர்களுக்கான கல்வி உதவிநிதியை நிறுவி தொழில்நுட்பப் பயிற்சிகளுக்கு அடித்தளம் அமைப்பதிலும் வி.மாணிக்கவாசகம் முக்கியப் பங்காற்றியுள்ளார் என்று மஇகா துணைத் தலைவர் எம். சரவணன் நினைவுகூர்ந்தார்.

நாட்டின் சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியச் சமூகத்தின் 30 ஆண்டுகாலப் பொருளியல் வளர்ச்சிக்கான ‘1971 பெரும் திட்டத்தைத் தயாரித்ததுடன், கோலாலம்பூரில் மஇகா தலைமையகக் கட்டடத்தையும் அவர் தொலைநோக்குப் பார்வையுடன் எழுப்பினார் என்றார் அவர்.

இந்திய மாணவர்களின் உயர்கல்விக்காக மஇகா கல்வி உதவிநிதியைத் திரு மாணிக்கவாசகம் தொடங்கினார். நேதாஜி தொழில்நுட்பக் கல்லூரி மூலம் தொழில்நுட்பப் பயிற்சிகளுக்கு அடித்தளம் அமைத்தார். அக்கல்லூரியே பின்னாளில்‘டேஃப்’ கல்லூரியாகவும், அன்றைய கல்வி நிதி எய்ம்ஸ்ட்’ பல்கலைக்கழகமாகவும் பரிணமித்துள்ளன.

திரு மாணிக்கவாசகத்தின் பங்களிப்புகள் இந்தியச் சமூகத்தைத் தாண்டி அனைத்து இன மலேசியர்களுக்கும் சென்றடைந்ததைக் குறிப்பிட்ட மூத்த அரசியல்வாதி டாக்டர் ராய்ஸ் யாத்திம் அவரை மலேசிய அரசியலின் வழிகாட்டி அடையாளம் என வர்ணித்தார்.

திரு மாணிக்கவாசகத்தின் 100வது பிறந்தநாள் அங்கமாக, கடந்த 80 ஆண்டுகால மலேசிய இந்தியச் சமூகத்தின் வரலாற்றுப் போராட்டங்களைப் பதிவு செய்யும் அவரது வாழ்க்கை வரலாற்று நூல் அடுத்த வாரம் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவுள்ளது. அந்நூல் கடந்த 80 ஆண்டுகால மலேசிய இந்தியச் சமூகத்தின் அரசியல், சமூகப் போராட்டங்களைப் பதிவு செய்யும் வரலாற்றுப் பேழையாக இருக்கும் என்றார் திரு சரவணன்.

குறிப்புச் சொற்கள்
உலகம்மலேசியாமஇகாதலைவர்நூற்றாண்டுவிழா