ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலம் மலேசியாவின் ஜோகூர் மாநிலத்திற்குப் பேரளவில் பலன் அளிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜோகூர் பொருளியல் வளர்ச்சிக்கு அது அதிகளவில் உதவுவற்கான அறிகுறிகள் தென்படுவதாக செப்டம்பர் 4ல், டிபிஎஸ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்புப் பொருளியல் மண்டலம் காரணமாக 2024ஆம் ஆண்டில் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவின் பொருளியல் வளர்ச்சியைவிட ஜோகூர் மாநிலத்தின் பொருளியல் விரைவாக வளர்ச்சி கண்டது.
அந்த ஆண்டில் ஜோகூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.4 விழுக்காடு உயர்ந்தது.
அதே ஆண்டில் மலேசியா மற்றும் சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி முறையே 5.1 விழுக்காடு மற்றும் 4.4 விழுக்காடு உயர்ந்தன.
மலேசியாவின் தேசிய அளவிலான பொருளியல் வளர்ச்சிக்கும் அதன் மாநிலங்களில் ஒன்றான ஜோகூரின் பொருளியல் வளர்ச்சிக்கும் உள்ள இடைவெளி 2016ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆக அதிகமாகப் பதிவானது.
சிறப்புப் பொருளியல் மண்டலத்துக்கான ஒப்பந்தம் இவ்வாண்டு ஜனவரி மாதம் கையெழுத்திடப்பட்டபோதிலும் புரிந்துணர்வுக் குறிப்பு ஓராண்டுக்கு முன்பு கையெழுத்திடப்பட்டது.
உற்பத்தி, தளவாடம், உணவுப் பாதுகாப்பு, சுற்றுப்பயணம், எரிசக்தி, மின்னிலக்கப் பொருளியல், பசுமைப் பொருளியல், நிதிச் சேவைகள், வர்த்தகச் சேவை, கல்வி, சுகாதாரம் ஆகிய முக்கியத் துறைகளில் முதலீடுகளை உயர்த்துவதே சிறப்புப் பொருளியல் மண்டலத்தின் இலக்கு.
தொடர்புடைய செய்திகள்
13வது மலேசியத் திட்டத்துக்கு ஜோகூர் முக்கிய பங்களிப்பாளராக இருக்கும் என்று டிபிஎஸ் வங்கியைச் சேர்ந்த பொருளியல் நிபுணரான சுவா ஹான் டெங் கூறினார்.
இத்திட்டத்தின்கீழ் தேசிய பொருளியல் வளர்ச்சியை சராசரியாக 4.5 விழுக்காட்டிலிருந்து 5.5 விழுக்காடு வரை உயர்த்த மலேசியா திட்டமிட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது, 2026ஆம் ஆண்டுக்கும் 2030ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தி்ல் தனியார் முதலீட்டை 6 விழுக்காடாக உயர்த்த மலேசியா இலக்கு கொண்டுள்ளது.
அரசாங்க முதலீடு 3.6 விழுக்காடாக ஏற்றம் காண வேண்டும் என்று அது திட்டம் வகுத்துள்ளது.
மலேசியாவில் வெளிநாட்டவர்கள் முதலீடு செய்வது தொடர்கிறது.
கடந்த மூன்று ஆண்டுகளில் மொத்த முதலீட்டில் 50 விழுக்காட்டிற்கு அதிகமான தொகை வெளிநாட்டவர்களால் முதலீடு செய்யப்பட்டதாகும்.
அதிகம் முதலீடு செய்த வெளிநாடுகள் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடம் வகிக்கிறது.
2025ஆம் ஆண்டில் மலேசியாவின் வெளிநாட்டு முதலீடுகளில் 40 விழுக்காடு சிங்கப்பூரைச் சேர்ந்தது.
தரவு மையங்களுக்கான முக்கிய இடமாக ஜோகூர் திகழ்வதாகத் திரு சுவா தெரிவித்தார்.
2024ஆம் ஆண்டில் சிங்கப்பூரை மையமாகக் கொண்ட பிரின்ஸ்டன் டிஜிட்டல், 1.5 பில்லியன் அமெரிக்க டாலர் (S$1.9 பில்லியன்) செலவில் ஜோகூர் தரவு மையத்தைத் தொடங்கியது. மற்ற நிறுவனங்களும் அவ்வாறு செய்திருப்பதை அவர் சுட்டினார்.

