எல்லை தாண்டிய புகைமூட்டத்தைக் கையாள சிறப்பு சட்டம்: ஆராயும் மலேசியா

எல்லை தாண்டிய புகைமூட்டத்தைக் கையாள சிறப்பு சட்டம்: ஆராயும் மலேசியா

படம்: பெரித்தா ஹரியான்

25 Sep 2026 - 7:45 pm

2 mins read

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் இயற்கை வளங்கள், சுற்றுப்புற, நீடித்த நிலைத்தன்மை அமைச்சு, எல்லைத் தாண்டிய புகைமூட்டப் பிரச்சினையைக் கையாள சிறப்பு சட்டத்தை வரைவு செய்ய ஆராய்ந்து வருகிறது.

புகைமூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை வலுப்படுத்துவதுடன் அதற்கான நடவடிக்கைகளை ஆராய்வதற்காக சம்பந்தப்பட்ட அமைச்சுகளையும் அமைப்புகளையும் கொண்ட சிறப்புக் குழுவை அமைக்கும்படி அமைச்சர் ஆர்த்தர் ஜோசப் குருப் அண்மையில் உத்தரவிட்டுள்ளதாக அந்த அமைச்சின் சுற்றுச்சூழல் மேலாண்மைப் பிரிவின் துணைச் செயலாளர் ஜி. புபாடி குறிப்பிட்டார்.

“புகைமூட்டத்தைக் கையாள்வதற்கான சிறப்புச் சட்டத்தை வரைய, சிங்கப்பூரில் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள வழிமுறைகளை அமைச்சு ஆராய்ந்து வருகிறது. இருப்பினும், ஒரு சட்டத்தை வரைவது எளிமையானது அல்ல,” என்று அவர் குறிப்பிட்டார்.

சிங்கப்பூரின் எந்த வழிமுறையை அமைச்சர் ஆர்த்தர் குறிப்பிட்டுப் பேசுகிறார் என்பது பற்றி திரு புபாடி தெளிவாகச் சொல்லவில்லை.

இருப்பினும், சிங்கப்பூரின் ‘எல்லை தாண்டிய புகைமூட்ட மாசுபாடு சட்டம் 2014’, சிங்கப்பூருக்கு அப்பால் உள்ள நிறுவனங்களின் நடவடிக்கைகள் சிங்கப்பூரின் புகைமூட்டத்திற்குப் பங்களித்தால் குறிப்பிட்ட அந்த நிறுவனங்கள்மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வழிவகுக்கிறது.

கடந்த ஜூலை மாதம் பாலித் தீவில் நடைபெற்ற எல்லை தாண்டிய புகைமூட்ட மாசுபாடு குறித்த ஆசியான் கூட்டங்களில், ‘அறிவியல் அரசதந்திரம்’, ‘புகைமூட்ட நிதி’ ஆகியவை தொடர்பான அறிக்கையை மலேசியா சமர்ப்பித்ததாகத் திரு புபாடி சுட்டினார்.

அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற இந்தோனேசியா, புரூனை, சிங்கப்பூர், தாய்லாந்து, திமோர்-லெஸ்டே ஆகிய ஐந்து நாடுகளின் ஆதரவையும் அந்த அறிக்கைகள் பெற்றதையும் அவர் நினைவுகூர்ந்தார்.

இந்த விவகாரம் குறித்து ஆசியான் செயலகம் மறுஆய்வு செய்யும் என்றும் இவ்வாண்டு டிசம்பர் மாதம் வியட்னாமில் 11 நாடுகள் பங்கேற்கும் கூட்டத்திற்கு அது கொண்டு செல்லப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
புகைமூட்டம்மலேசியாசட்டம்சிறப்புஆய்வு