பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் இவ்வாண்டின் முதல் எட்டு மாதங்களில் டெங்கி பாதிப்பு அதிகரித்துள்ளது.
அதுமட்டுமல்லாது, டெங்கி காய்ச்சலால் மரணமடைந்தோர் எண்ணிக்கையும் அதிகரித்தது.
டெங்கி பாதிப்பு மோசமடைந்ததற்கு வானிலையும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.
ஆகஸ்ட் 17ஆம் தேதி நிலவரப்படி, மலேசியாவில் 92,420 பேர் டெங்கியால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இந்தத் தகவலை அந்நாட்டு சுகாதாரத்துறை வெளியிட்டது.
டெங்கியால் சிலாங்கூர் மாநிலம் ஆக அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
அம்மாநிலத்தில் 47,398 பேர் டெங்கியால் பாதிக்கப்பட்ட்டனர்.
அதற்கடுத்து, ஜோகூரில் 9,983 பேரும் தலைநகர் கோலாலம்பூரில் 8,392 பேரும் டெங்கியால் பாதிக்கப்பட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
ஆகஸ்ட் 17ஆம் தேதியில் மட்டுமே மலேசியா முழுவதும் 302 டெங்கி பாதிப்புகள் பதிவாகின.
பொதுவாக வானிலைக்கும் டெங்கியால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கைக்கும் தொடர்பு இருப்பதாக கடல், புவி அறிவியல் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியிர் அஸிஸான் அபு சமா தெரிவித்தார்.
“வெப்பநிலைக்கும் டெங்கி பாதிப்புக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. மழைக்காலத்துக்குப் பிறகு டெங்கியைப் பரப்பும் ஏடிஸ் கொசுக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். எனவே, மலேசியாவில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ஏடிஸ் கொசுக்களின் எண்ணிக்கை உச்சம் எட்டும். இதன் காரணமாக, டெங்கியால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் அதிகரிக்கும்,” என்றார் அவர்.
கொவிட்-19 போன்ற நோய்கள் ஏற்படாமல் இருக்க அதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் நிலையில் டெங்கி மீது அதிக கவனம் செலுத்தப்படுவதில்லை என்று மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தின் பொது சுகாதார நிபுணர் பேராசிரியர் ஷரிஃபா இசாட் வான் புத்தே கூறினார்.
ஏடிஸ் கொசுக்களின் இனப் பெருக்கத்தைத் தடுக்க கூடுதல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார் அவர்.
வொல்பாக்கியா கொசுக்களைப் பயன்படுத்துவது, சிறாருக்கு டெங்கி தடுப்பூசி போடுவது போன்ற உதாரணங்களை அவர் மேற்கோள்காட்டினார்.

