சிட்னி: ஆஸ்திரேலியாவில் 2024ஆம் ஆண்டில் மட்டும் குறைந்தது 34 பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இதன்படி, இவ்வாண்டில் நான்கு நாள்களுக்குச் சராசரியாக ஒரு பெண் கொல்லப்படும் நிலை அந்நாட்டில் ஏற்பட்டுள்ளது.
ஏப்ரல் 22ஆம் தேதி அதிகாலை 28 வயது திருவாட்டி மோலி டைஸ்ஹெர்ஸ்ட், நியூ சவுத் வேல்சில் உள்ள தன் இல்லத்தில் கொல்லப்பட்டார்.
அவரை பாலியல் ரீதியாகத் தாக்கி, அவரைப் பின்தொடர்ந்து அச்சுறுத்தி, மிரட்டல் விடுத்து வந்த அவரின் முன்னாள் துணைவர் பிணையில் விடுவிக்கப்பட்டபோது அவரைத் தேடிச் சென்று கொன்றார்.
திருவாட்டி மோலிக்கும் அவரின் குடும்பத்தாருக்கும் மிரட்டல் விடுக்கும் வகையில் அந்த முன்னாள் துணைவர் இருப்பதாகக் காவல்துறையினர் எச்சரித்தும் நீதிமன்றம் அந்த ஆடவரைப் பிணையில் விடுவித்தது. 16 நாள்களுக்குப் பிறகு திருவாட்டி மோலியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
பெண்களுக்கு எதிரான வன்முறை, ஆஸ்திரேலியாவில் மிரளவைக்கும் அளவில் உள்ளதை இதுபோன்ற சம்பவங்கள் உணர்த்துகின்றன.
அதற்குமுன் ஏப்ரல் 13ஆம் தேதி, மனநலப் பிரச்சினைகளுடைய 40 வயது ஆடவர் ஒருவர் சிட்னி கடைத்தொகுதி ஒன்றில் கத்தியால் பலரையும் தாக்கினார்.
அவர் தாக்கிய 17 பேரில், 14 பேர் பெண்கள். உயிரிழந்த அறுவரில், ஐவர் பெண்கள்.
தொடர்புடைய செய்திகள்
பெண்களுக்கு எதிரான வன்முறையை, ‘தேசிய நெருக்கடி’ என்று ஆஸ்திரேலியப் பிரதமர் வருணித்துள்ள நிலையில் பெண்கள் மீதும் சிறார்கள் மீதும் பெரும் பாதிப்பை இது ஏற்படுத்திவருவதாகச் சுட்டினார்.
இருப்பினும், கணவன் மனைவியால் ஏற்படும் வன்முறைச் சம்பவங்களின் எண்ணிக்கை ஆஸ்திரேலியாவைவிட வேறு பல நாடுகளில் மேலும் அதிகமாகப் பதிவாகியுள்ளதாக 2019 ‘ஓஇசிடி’ அறிக்கை கூறுகிறது.
துருக்கி, அமெரிக்கா, நியூசிலாந்து இந்தப் பட்டியலில் முன்னணி வகிக்கின்றன.